விரைவில் கோயம்பேடு போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு : அமைச்சர் பி.கே.சேகர்பாபு..!

கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி வளாகத்திலுள்ள அண்ணா கனி அங்காடிகளை அமைச்சர் பி.கே.சேகர்பாபு நேரில்ஆய்வு செய்தார். அப்போது அவர்செய்தியாளர்களிடம் கூறியதாவது:
கோயம்பேடு அங்காடியில் 86 ஏக்கரில் காய்கறி அங்காடி, மலர் அங்காடி, கனி அங்காடி மற்றும் உணவு தானிய அங்காடி என 3,941கடைகள் அமைந்துள்ளன. இதில் கனி அங்காடியில் இருக்கும் 992 கடைகள், அந்த கடைகளிலே ஏற்படுகின்ற கழிவுகள், அந்த கழிவுகளை முறையாக அகற்றுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது.
மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் தடுக்க 2.5 கிமீ தொலைவுக்கு மழைநீர் கால்வாய் புதிதாககட்டவேண்டும் என பொறியாளர் கள் கூறியுள்ளனர். இருப்பினும் முதல்கட்டமாக இருக்கும் கால்வாயை தூர்வாரும் பணி விரைவில் தொடங்க உள்ளது.
திமுக ஆட்சி ஏற்பட்ட பின் அங்காடி மேம்பாட்டுக்காக ரூ.20 கோடிஒதுக்கப்பட்டது. அதில், நுழைவு வாயில் பொது அறிவிப்பு சாதனங்கள், கண்காணிப்பு கேமராக்கள், உயர்மட்ட மின் விளக்குகள், சிதிலமடைந்த மின் விளக்குகளை புதுப்பித்தல் மற்றும் டிஜிட்டல் அறிவிப்புபலகைகள் பொருந்தும் பணிகள்ரூ.13 கோடியில் முடிக்கப்பட்டுள் ளன. மீதமுள்ள பணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது.
இதுதவிர, அங்காடியை நவீனப்படுத்த ரூ.10 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியில், கோயம்பேடு மலர் அங்காடிக்கு அருகே எழில்மிகு பூங்கா, அங்காடியில் சூரியஒளி மின்சார கட்டமைப்பை உருவாக்குதல், 24 மணி நேர ஒருங்கிணைந்த கட்டுப்பாட்டு அறை, அங்காடிக்கென பிரத்யேக இணைய வலைதளம் உருவாக்குதல் ஆகியபணிகளுக்கு ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணியாணை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கோயம்பேடு உணவு தானியபகுதி மற்றும் பழ அங்காடியில் காலியாக உள்ள கடைகளை ஏலத்துக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்படும். கோயம்பேடு சந்தையில் சேரும் கழிவுகளை அகற்றும்ஒப்பந்தப் பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும்.
கோயம்பேடு சந்தையில் போக்குவரத்து நெரிசலை ஒழுங்குபடுத்தும் நேரத்தில், கடைகள் வைத்துள்ளவர்களின் வாழ்வாதாரம் பாதிக்காமல் நடவடிக்கை எடுத்து வருகிறோம். நிரந்தர நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.