1. Home
  2. தமிழ்நாடு

கோயம்பேட்டில் இருந்து ஆம்னி பேருந்துகளை இயக்க தடை: வழக்கு தொடர பஸ் உரிமையாளர் சங்கம் அறிவிப்பு..!

1

சென்னை மாநகருக்குள் பயணிகளை ஏற்றவோ, இறக்கவோ ஆம்னி பேருந்துகள் அனுமதிக்கப்படமாட்டாது என்று போக்குவரத்து ஆணையர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். சென்னை மாநகருக்குள் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கத்தில் புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. சர்வதேச தரத்தில் பயணிகளுக்கு பல்வேறு வசதிகளுடன் கிளாம்பாக்கம் பேருந்து முனையம் 2023 டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது. பொங்கல் பண்டிகையை என்பதால் தென் மாவட்டங்களுக்கு கிளாம்பாக்கத்திலிருந்து இயக்கப்பட்டது. இதர பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே இயக்கப்பட்டு வந்தன.

இந்நிலையில், இந்த மாத இறுதிக்குள் அனைத்து போக்குவரத்து கழக பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் இருந்து இயக்கப்படும் என்று போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்திருந்தார். ஆம்னி பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டுவதற்கு அரசு அளித்த கால அவகாசம் இன்று முடிவடைகிறது. இந்நிலையில், இரவு முதல் கிளாம்பாக்கத்தில் இருந்தே ஆம்னி பேருந்துகள் இயக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுக்காப்பு ஆணையம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிவிப்பில்; “24.01.2024 (நேற்று) இரவு முதல் சென்னையிலிருந்து தெற்கு நோக்கி இ.சி.ஆர். சாலை மார்க்கம் நீங்கலாக செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு நினைவு பேருந்து நிலையத்திலிருந்து மட்டுமே புறப்பட வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. சென்னை மாநகரக்குள் பயணிகளை ஏற்றுவதோ, இறக்குவதோ அனுமதிக்கப்படாது. ஏற்றாற்போல் ரெட் பஸ், அபி பஸ் உள்ளிட்ட ஆம்னி பேருந்துகளுக்கு பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் தக்க மாற்றங்களை செய்திவுடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதனை மீறி பயணிகளுக்கு உரிய தகவலை வழங்காமல் அவர்களை தேவை இல்லாமல் சிரமத்திற்கு உள்ளாக்கும் ஆம்னி பேருந்துகளின் ஆப்ரேட்டர்கள் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின் படியும் மட்டுமல்லாமல் கிரிமினல் சட்டங்களின் படியும் நடடிவக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்படுகிறது”. என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கிடையே கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க முடியாது என்றும் கோயம்பேட்டில் இருந்துதான் ஆம்னி பஸ்களை இயக்குவோம் என்று ஆம்னி பஸ் உரிமையாளர்கள் சங்க தலைவர் அன்பழகன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அன்பழகன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது., 2 லட்சம் பயணிகள் முன்பதிவு செய்துள்ள நிலையில், கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க முடியாது. இன்று (நேற்று) மட்டும் 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். கிளாம்பாக்கத்தில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க தமிழக அரசு அவகாசம் வழங்க வேண்டும். அரசு எங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தாமல் முடிவெடுத்துள்ளது.

சென்னையில் இருந்து ஆம்னி பஸ்களை இயக்க நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. நீதிமன்றம் அளித்த தீர்ப்பை போக்குவரத்துத்துறை மீறுகிறது. முடிச்சூர் பேருந்து நிலையம் இன்னும் செயல்பாட்டிற்கு வரவில்லை. பேருந்து நிலையம் தயாராகாமல் ஆம்னி பஸ்களை இயக்கினால் செங்கல்பட்டு வரை போக்குவரத்து நெரிசல் ஏற்படும். ஆம்னி பஸ்கள் வழக்கம்போல் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்துதான் இயக்கப்படும். மாநகரப் பகுதியில் உள்ள பயணிகள் எங்கு முன்பதிவு செய்துள்ளார்களோ அந்த பகுதிக்கு நேரில் சென்று பயணம் மேற்கொள்ளலாம்.  இது மக்களுக்கான அரசு. எனவே, இந்த விஷயத்தில் முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையென்றால் இந்த விவகாரத்தில் வழக்கு தொடர்வதைத் தவிர வேறு வழியில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

இந்த சூழ்நிலையில், கோயம்பேட்டில் இருந்து நேற்று ஆம்னி பேருந்துகளை இயக்கக்கூடாது என போக்குவரத்து துறை அதிகாரிகள் நேரடியாக சென்று வலியுறுத்தினர். அப்போது, அவர்களுக்கும் பேருந்து ஓட்டுநர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. திடீரென காலி செய்ய முடியாது என பேருந்து உரிமையாளர்கள் கூறினர். இதனால் கோயம்பேடா? கிளாம்பாக்கமா? என்ற குழப்பம் நீடிக்கிறது.

Trending News

Latest News

You May Like