கொல்கத்தா அணி 3-வது முறையாக சாம்பியன்..!
சென்னை சேப்பாக்கத்தில் இன்று நடைபெற்று இறுதிப்போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் மற்றும் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் மோதின. இறுதிப்போட்டிக்கான டாஸ் சுண்டப்பட்டது. இதில் டாஸ் வென்ற சன்ரைசர்ஸ் ஐதராபாத் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, அந்த அணியின் தொடக்க வீரர்களாக டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் களமிறங்கினர். முதல் ஓவரில் ஸ்டார்க் பந்து வீச்சில் 2 ரன்கள் எடுத்திருந்த நிலையில் அபிஷேக் சர்மா ஆட்டமிழந்தார். அடுத்த ஓவரை வைபவ் அரோரா வீசிய நிலையில் மற்றொரு தொடக்க வீரரான டிராவிஸ் ஹெட் அவர் சந்தித்த முதல் பந்திலேயே ரன் எதுவும் எடுக்காமல் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த ராகுல் திரிபாதி 13 பந்தில் 9 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டமிழக்க, மற்றொரு வீரரான நிதிஷ் ராணா 13 ரன்னில் ஆட்டமிழந்தார். கொல்கத்தா வீரர்களின் அபார பந்து வீச்சால் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து சன்ரைசர்ஸ் தடுமாறியது. சற்று நிலைத்து நின்று ஆடிய மார்க்ரம் 23 பந்துகளில் 20 ரன்கள் எடுத்த நிலையில் வெளியேறினார்.
அடுத்து வந்த ஷபாஸ் அகமது 8 ரன்னிலும், அப்துல் சமத் 12 ரன்னிலும், கிளாசன் 16 ரன்னிலும் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இறுதியில், ஐதராபாத் 18.3 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 113 ரன்கள் மட்டுமே எடுத்தது. சிறப்பாக பந்து வீசிய கொல்கத்தா வீரர்கள் ரசல் 3 விக்கெட்டுகளையும், மிட்செல் ஸ்டார்க், ராணா தலா 2 விக்கெட்டுகளையும், வைபவ், நரைன், வருண் சக்ரவர்த்தி தலா 1 விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இதையடுத்து 114 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் தொடக்க வீரர்களாக குர்பாஸ் மற்றும் சுனில் நரைன் களமிறங்கினர். அதில் சுனில் நனரன் 6 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்த வந்த வெங்கடேஷ் ஐயர், குர்பாஸ் உடன் இணைந்து ஐதராபாத் அணியின் பந்துவீச்சை அடித்து நெறுக்கியது. அதிரடியாக விளையாடிய இந்த ஜோடியில் குர்பாஸ் 39 ரன்னில் ஆட்டமிழந்தார்.
அடுத்து வந்த கேப்டன் ஷ்ரேயால் ஐயர், வெங்கடேஷ் ஐயருடன் ஜோடி சேர்ந்தார். அதிரடியாக ஆடிய வெங்கடேஷ் ஐயர் அரைசதம் அடித்தார். இறுதியில் கொல்கத்தா அணி 10.3 ஓவரில் 2 விக்கெட் இழப்பிற்கு 114 ரன்கள் எடுத்தது. இதன் மூலம் 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் கொல்கத்தா அணி அபார வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணி 3 முறையாக கோப்பையை கைப்பற்றி உள்ளது.