1. Home
  2. தமிழ்நாடு

கொல்கத்தா டாக்டர் கொலை வழக்கு : விசாரணை அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவு!

1

கொல்கத்தா  பெண் டாக்டர் பாலியல் வன்கொடுமை சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. பெண் மருத்துவரின் மரணத்துக்கு நீதி கேட்டு அரசு டாக்டர்கள் அன்றாட பணிகளை புறக்கணித்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், கொல்கத்தா பெண் டாக்டர் கொலை குறித்து சுப்ரீம் கோர்ட்டு தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்தது. தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் உத்தரவின் பேரில் நேற்று முன்தினம் இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இந்நிலையில் பெண் பயிற்சி டாக்டர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட விவகாரம் தொடர்பான வழக்கு தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ராஅமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது நீதிபதிகள், பயிற்சி மருத்துவர் கொலை வழக்கில் எப்.ஐ.ஆர். ஏன் தாமதமாக பதிவு செய்யப்பட்டது ஏன்? என்று கேள்வி எழுப்பினர். மேலும் ஆனாதிக்க மனநிலை காரணமாகவே நோயாளிகளின் உறவினர்கள் பெண் டாக்டர்களை தாக்குகின்றனர். டாக்டர்கள் பல்வேறு வன்முறைக்கு ஆளாவது தொடர்கதையாகவே இருந்து வருகிறது. இவற்றை தடுக்க நடவடிக்கை எடுக்க மற்றொரு வன்கொடுமை சம்பவத்திற்காக காத்திருக்க முடியாது. இரவு நேரங்களில் பணிபுரியும் டாக்டர்களுக்கு ஓய்வு அறைகள் கூட இல்லை. பல இடங்களில் மருத்துவர்கள் தொடர்ந்து 36 மணி நேர பணிக்கு உட்படுத்தப்படுகிறார்கள். உயிரிழந்த பெண்ணின் புகைப்படங்கள் அதிகளவில் வெளியாகியுள்ளது. இதுதான் உயிரிழந்த பெண்ணுக்கு கொடுக்கும் மரியாதையா? என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் பயிற்சி டாக்டர் படுகொலை வழக்கில் விசாரணை நிலையை விரிவான அறிக்கையாக சி.பி.ஐ. தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளனர். இந்த அறிக்கையை வரும் வியாழக்கிழமைக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர். இது கொல்கத்தா மருத்துவமனை பிரச்சினை மட்டும் அல்ல; ஒட்டுமொத்த டாக்டர்களின் பிரச்சினை. பயிற்சி டாக்டர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய தேசிய அளவில் குழு அமைக்க தலைமை நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like