#JUST IN : மாநில பாஜக தலைவர் மாற்றம்!

முன்னாள் மத்திய இணை அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், பாஜகவின் கேரள மாநிலத் தலைவராகப் பொறுப்பேற்க உள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலான அரசியல் அனுபவம் கொண்ட இவர், கேரளாவில் கட்சிக்கு புதிய உத்வேகம் அளிப்பார் என்று பாஜக நம்புகிறது.
தொலைநோக்குப் பார்வையை வெளிப்படுத்துவதில் பெயர் பெற்றவர், வளர்ச்சியை மையமாகக் கொண்ட அணுகுமுறையைப் பின்பற்றுபவர் என்பதால் ராஜீவ் சந்திரசேகரை பாஜக மத்தியத் தலைமை தேர்ந்தெடுத்துள்ளது. வழக்கமான அரசியல்வாதியைப் போல் இல்லாமல், எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு விரிவாக பதில் அளிப்பது ராஜீவின் பாணி. பிரதமர் மோடியின் செல்வாக்கை பிரதிபலிக்கும் வகையில் கேரள மாநிலத் தலைவரைத் தேடிய தேசியத் தலைமை இவரைத் தேர்வு செய்துள்ளது.
ஒரு பிரபல தொழிலதிபராக இருந்து அரசியல்வாதியாக மாறிய ராஜீவ் 2006ஆம் ஆண்டு கர்நாடகாவிலிருந்து பாஜக எம்.பி.யாக மாநிலங்களவையில் நுழைந்தார். தொடர்ந்து மூன்று முறை மாநிலங்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2021ஆம் ஆண்டு, மத்திய இணை அமைச்சராக நியமிக்கப்பட்டார். கேரள தேசிய ஜனநாயக கூட்டணியின் துணைத் தலைவராகவும் பணியாற்றினார்.
ராஜீவ் சந்திரசேகர் கேரளாவில் ஆர்.எஸ்.எஸ். பின்னணி இல்லாத முதல் பாஜக மாநிலத் தலைவராக இருப்பார். நீண்டகாலமாகவே கேரள பாஜகவினர் இடையே உட்கட்சி பூசல் நிலவுகிறது. ராஜீவ் தலைமைப் பொறுப்புக்கு வந்ததும் நிர்வாகிகளை ஒருங்கிணைத்து கட்சியை மீண்டும் பலப்படுத்துவார் என்று பாஜக தலைமை நம்புகிறது.