1. Home
  2. தமிழ்நாடு

மக்களவை தேர்தலுக்கான கெஜ்ரிவாலின் 10 கேரண்டி..!

1

ஆம் ஆத்மி கட்சியின் 10 உத்தரவாதங்களை அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும், டெல்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் நேற்று வெளியிட்டார்.

இலவச மின்சாரம், மேம்பட்ட சுகாதாரம் போன்றவைகளை உள்ளடக்கிய அவரது உத்தரவாதங்கள் பரந்த அளவில் பொதுச் சுகாதாரத்தை உறுதிப்படுத்துவதற்கான முன்னெடுப்புகளைக் கொண்டுள்ளது என அக்கட்சியினர் புகழ்ந்து வருகின்றனர். 

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கூறியதாவது, 

மக்களவைத் தேர்தல் 2024-க்கான ஆம் ஆத்மி கட்சியின் 10 உத்தரவாதங்களை இன்று(நேற்று) நாங்கள் வெளியிடுகிறோம். எனது கைது காரணமாக அது தாமதமானது என்றாலும் இன்னும் பல கட்டத் தேர்தல் மிச்சமிருக்கின்றன.

இந்த உத்தரவாதங்கள் புதிய இந்தியாவுக்கான பார்வைகள். இவைகள் இன்றி ஒரு நாடு வளர்ந்த நாடாக மாற முடியாது. பா.ஜ.க. ஏற்கெனவே தனது வாக்குறுதிகளில் தோல்வியடைந்து விட்டது. எனது வாக்குறுதிகளின் சாதனைகளுக்கு ஆதாரம் உள்ளன. இனி கெஜ்ரிவாலின் உத்தரவாதமா அல்லது மோடியின் உத்தரவாதமா என்பதை மக்களே முடிவு செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

மக்களவைத் தேர்தலுக்கான கெஜ்ரிவாலின் உத்தரவாதங்கள் வருமாறு:

24 மணி நேர மின் விநியோகம்: எங்களது அரசு நாடு முழுவதும் தொடர்ந்து மின்விநியோகம் இருப்பதை உறுதி செய்யும். நாடுமுழுவதும் உள்ள பொருளாதாரத்தில் பின்தங்கிய குடும்பத்துக்கு 200 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.

கல்விச் சீர்திருத்தம்: நாட்டில் பிறக்கும் ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச கல்வியைக் கொடுக்கும் வகையில், தனியார் பள்ளிகளை மிஞ்சும் அளவுக்கு அரசுப்பள்ளிகளின் தரத்தை எங்களின் அரசு உயர்த்தும்.

சுகாதார மேம்பாடு: ஒவ்வொரு கிராமங்கள் மற்றும் உள்ளூர் பகுதிகளிலும் மொஹல்லா மருத்துவமனைகள் உருவாக்கப்படும். விரிவான சுகாதாரத்தினை பெறும் வகையில் மாவட்ட மருத்துவமனைகளில் பல்வேறு சிறப்பு வசதிகள் மேம்படுத்தப்படும்.

தேசத்தின் பாதுகாப்பு: சீனாவிடமிருந்து ஆக்கிரமிப்புகளை மீட்க இந்திய ராணுவத்துக்கு முழு சுயாதீன உரிமை வழங்கப்படும். பிராந்திய ஒருமைப்பாட்டுக்கான பேச்சுவார்த்தைகள் தொடரப்படும்.

அக்னி வீரர்கள் திட்டம் நீக்கம்: அக்னி வீரர்கள் திட்டத்தினை நிறுத்தி விட்டு, பணியில் சேர்ந்த அனைத்து வீரர்களையும் நிரந்தர வேலையில் முறைப்படுத்தி ஒப்பந்த முறையை ஒழிப்போம். ராணுவத்துக்கு போதிய நிதியினை வழங்குவோம்.

விவசாயிகள் நலன்: விவசாயிகளின் கண்ணியமான வாழ்வினை மேற்கொள்ள சுவாமிநாதன் அறிக்கையின் அடிப்படையில் பயிர்களுக்கு இழப்பீடு வழங்குவது உறுதி செய்யப்படும்.

டெல்லிக்கு மாநில அந்தஸ்து: டெல்லி வாழ் மக்களின் நீண்ட கால கோரிக்கையான டெல்லி முழு மாநில அந்தஸ்த்தினை எங்களின் அரசு வழங்கும்.

வேலைவாய்ப்பு உருவாக்கம்: வேலைவாய்ப்பின்மையை போக்க இண்டியா கூட்டணி அரசு ஆண்டு தோறும் 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்கும்.

ஊழல் ஒழிப்பு: ஊழல் ஒழிப்பை உறுதி செய்வோம். பாஜக தனக்கு சாதகமானவர்களைப் பாதுகாக்கும் போக்கினை உடைப்போம்.

தொழில் மற்றும் வர்த்தக மேம்பாடு: உற்பத்தி துறையில் சீனாவை மிஞ்சுவதை இலக்காகக் கொண்டு, பி.எம்.எல்.ஏ.வின் விதிமுறைகளில் இருந்து ஜி.எஸ்.டி. விடுவிக்கப்பட்டு எளிமையாக்கப்படும்.

Trending News

Latest News

You May Like