சிறையில் இருந்து வெளியே வந்தார் கெஜ்ரிவால்..!
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மதுபான கொள்கை ஊழல் தொடர்பான பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையால் இந்தாண்டு மார்ச் 21-ம் தேதி முதன்முதலாக கைது செய்யப்பட்டார். அமலாக்கத் துறையின் காவலில் இருக்கும் போதே, கடந்த ஜூன் 26-ம் தேதி சிபிஐ-யும் அவர் மீது ஊழல் வழக்கு பதிவு செய்து அவரைக் கைது செய்தது.
இதனிடையே, அமலாக்கத் துறை தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் ஜுலை 12-ம் தேதி அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டது. என்றாலும் சிபிஐ-யால் கைது செய்யப்பட்டிருந்ததால் அவர் தொடந்து திஹார் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.
இந்த கைதை எதிர்த்து அரவிந்த் கேஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். மேலும், தனக்கு ஜாமீன் கோரியும் மனு தாக்கல் செய்திருந்தார். இதுதொடர்பான விசாரணை நீதிமன்றத்தில் ஏற்கெனவே நடைபெற்று முடிந்த நிலையில் உச்ச நீதிமன்ற நீதிபதி உஜ்ஜல் புயான் அடங்கிய அமர்வு அர்விந்த் கேஜ்ரிவால் மனு மீதான தீர்ப்பை செப்டம்பர் 5-ம் தேதியன்று ஒத்திவைத்தது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்ற வலைதளத்தில் செப்டம்பர் 13-ம் தேதி விசாரணைக்கு வரும் வழக்குகளின் பட்டியலில் அர்விந்த் கேஜ்ரிவால் தாக்கல் செய்த மனுவும் இடம்பெற்றிருந்ததது. இந்த நிலையில் சிபிஐ தொடர்ந்த வழக்கில் டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலுக்கு ஜாமீன் வழங்கி உச்ச நீதிமன்றம் இன்று (செப்.13) உத்தரவிட்டது.
ஹரியாணா சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்பாக அரவிந்த் கேஜ்ரிவால் ஜாமீனில் விடுவிக்கப்பட்டிருப்பது ஆம் ஆத்மி கட்சிக்கு பெரிய பலமாக பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் சற்றுமுன்
திகார் சிறையில் இருந்து வெளியே வந்தார் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால்
சிறையில் இருந்து வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். கொட்டும் மழையில் சிறையில் இருந்து ஜாமினில் வெளியே வந்த கெஜ்ரிவாலுக்கு பாரத் மாதா கீ ஜே என கோஷமிட்டு ஆம் ஆத்மி தொண்டர்கள் வரவேற்றனர்.