நான் கூறியதை கெஜ்ரிவால் கேட்கவே இல்லை - அன்னா ஹசாரே..!
மகாராஷ்டிராவை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் அன்னா ஹசாரே, கடந்த 2011-ம் ஆண்டு ஊழலுக்கு எதிரான இயக்கத்தின் முகமாக இருந்தார். ஊழலுக்கு எதிரான அவரது லோக்பால் இயக்கத்தில் அர்விந்த் கெஜ்ரிவால் இணைந்தார். பிறகு ஆம் ஆத்மி கட்சியை தொடங்கிய கெஜ்ரிவால் டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானார்.
டெல்லி மதுபான கொள்கைஊழல் வழக்கில் கெஜ்ரிவால் கடந்த ஏப்ரலில் கைது செய்யப்பட்டபோது, “கெஜ்ரிவால் கைதுக்கு அவரது செயல்களே காரணம். என்னுடன் பணியாற்றிபோது மதுவுக்கு எதிராக குரல் கொடுத்த கெஜ்ரிவால் தற்போது மதுபான கொள்கையை அமல்படுத்துவது வருத்தம் அளிக்கிறது’’ என்று அன்னா ஹசாரே கூறினார்.
இந்நிலையில் மதுபான கொள்கை ஊழல் வழக்கில் ஜாமீனில் விடுதலையான கெஜ்ரிவால் இன்னும் 2 நாட்களில் பதவி விலகப் போவதாக அறிவித்துள்ளார். இதுகுறித்து அன்னா ஹசாரே நேற்று கூறுகையில், “நான் கெஜ்ரிவாலுடன் பணியற்றிய காலத்தில் ‘அரசியலில் சேர வேண்டாம், சமூகத்துக்கு சேவையாற்றுங்கள், நீங்கள் பெரிய மனிதராக மாறுவீர்கள்’ என்று அவரிடம் கூறிவந்தேன். சமூக சேவை மகிழ்ச்சி அளிக்கும் என கூறினேன். ஆனால் நான் கூறியதை அவர் கேட்கவே இல்லை. எனவே நடக்க வேண்டியது இன்று நடந்துவிட்டது’’ என்றார்.