1. Home
  2. தமிழ்நாடு

ஆட்சி மாறும்போது கருணாநிதி சிலைகள் நொறுக்கப்படும் - சீமான்..!

1

தூத்துக்குடியில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சென்னையில் இருந்து விமானம் மூலம் இன்று மதியம் தூத்துக்குடிக்கு வந்தார். தூத்துக்குடி விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இந்திய மீனவர்கள் சட்டவிரோதமாக எல்லை தாண்டி மீன் பிடிக்கின்றனர். அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என இலங்கை அதிபர் அனுரகுமார திசநாயக்க கூறியுள்ளார். இலங்கையில் தமிழர்களை சுட்டு கொன்றார்கள், வலைகளை கிழித்து எறிந்தார்கள், இதற்கு மேல் என்ன நடவடிக்கை எடுக்க போகிறார்கள். இதற்கு மேல் என்ன நடவடிக்கை உள்ளது. இந்திய பெருங்கடல் என்றால் போதுமா? மீன் பிடிப்பதற்கு உரிமை இல்லையா?. இலங்கையை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு இலங்கை மீது இந்திய அரசு பொருளாதார தடை விதிக்க வேண்டும். கட்சத்தீவை மீட்க வேண்டும்.

அ.தி.மு.க ஆட்சியில், அடிக்கல் நாட்டப்பட்ட திட்டங்கள் தி.மு.க ஆட்சியில் முடிக்கப்பட்டுள்ளன. பேருந்து நிலையத்தில் உதயசூரியன் சின்னம் தான் உள்ளது. அதிகாரம் நிலையானது என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அதிகாரம் தமிழன் கைக்கு வரும் போது அனைத்தும் மாறும். வசதியாக பதுங்க பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டது தான் திராவிடம்.

தமிழ் தேசியமும், திராவிடமும் ஒன்றல்ல. வேளாண் கல்லூரி மாணவர்களை நில அளவைக்கு பயன்படுத்துவது தவறு. 2026 சட்டப்பேரவை தேர்தலுக்கான கட்டமைப்பு நடைபெறுகிறது. அனைத்து கட்சியும் என் பின்னால் தான் ஓடி வருகிறார்கள். நாம் தமிழர் கட்சி தனித்து போட்டியிடும். என் பயணம் என் கால்களை நம்பிதான் உள்ளது. அடுத்தவர் கால்களை நம்பி பயணத்தை தொடங்காதீர்கள். என் கொள்கை யாரோடும் ஒத்து போகவில்லை. வியாபாரத்துக்காக கல்வி, மருத்துவத்தை தரம் குறைக்கிறார்கள். அவர்களுடன் எப்படி நாங்கள் சேர முடியும்.

அரசியல் அதிகாரம் இல்லாத, எளிய மக்கள் உள்ள இடங்களில் தான் நச்சு ஆலைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஊழல் செய்யும் அமைச்சர்கள் பட்டியலை வெளியிடுவோம் என்று அதிமுக பொதுச் செயலாளர் கூறியுள்ளார். திமுகவும் இதையே கூறியது. ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்த அதிமுக, திமுக. இரண்டு கட்சிகளுக்கும் இடையே தெருச்சண்டை தான் நடக்கிறது. இதை ஒழிக்க வேண்டும். இவ்வாறு சீமான் கூறினார்.

அப்போது அரசின் திட்டங்களுக்கு கருணாநிதி பெயர் சூட்டுவது குறித்த கேள்விக்கு அவர் அளித்த பதில் பின்வருமாறு, “முதல்வர் ஸ்டாலின் தலைமையில் புதிய பேருந்து நிலையம், ஜல்லிக்கட்டு மைதானம், நூலகம் கட்டப்படுகிறது. ஆனால் இந்த திட்டங்களுக்கு அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டப்படுகிறது. ஆனால் அதை முடித்து பெயர் வைப்பது திமுகவாக இருக்கிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் உதயசூரியன் சின்னத்தில் கட்டப்பட்டிருக்கிறது. எங்க பணத்தில், உங்க கட்சி சின்னம் எப்படி வருகிறது? எல்லாவற்றிற்கும் உங்கள் தந்தையின் பெயரை வைக்கிறீர்கள். கழிப்பிடத்துக்கும், குளிப்பிடத்துக்கும்தான் உங்கள் அப்பா பெயரை வைக்கவில்லை. பெயர் வைப்பது தப்பில்லை.. ஆனால் உங்கள் பணத்திலோ, உங்கள் தந்தையின் பணத்திலோ கட்டப்பட்டவைக்கு அவர் பெயரை வையுங்கள். ரூ.250 கோடிக்கு சமாதி கட்டுகிறீர்களே அது யாருடைய காசு? நூலகம் கட்டுகிறீர்களே அது யாருடைய காசு? வள்ளல் பாண்டி துரை தேவர் சொத்தையெல்லாம் விற்றுவிட்டு தமிழ்ச்சங்கம் அமைக்கவில்லையா? அவருடைய பெயரை வைக்க தெரியவில்லையா? சொத்தை எல்லாம் நாட்டின் விடுதலைக்காக விற்று, கடைசி காலத்தில் மண்ணெய் விற்று பிழைத்தாரே என் பாட்டன் வஉசி அவருடைய பெயரை ஏன் வைக்கவில்லை? அவருக்கு தலைநகரில் சிலை இருக்கிறதா? அவர் இல்லாமல் இந்நாட்டுக்கு விடுதலை வந்துவிட்டதா? கேட்டால் அவர்தான் (கருணாநிதிதான்) நாட்டு மக்களை பற்றி சிந்தித்தார் என்று சொல்கிறார். உங்க அப்பா(கருணாநிதி) நாட்டை பற்றி சிந்தித்தாரா? அல்லது வீட்டை பற்றி சிந்தித்தாரா? நாட்டு மக்களை பற்றி அவர் (கருணாநிதி) சிந்தித்ததை 100 பட்டியலிட்டு சொல்லுங்களேன். நாட்டு மக்களைப்பற்றி சிந்தித்ததாக சொல்கிறீர்களே அவர்தான் சாராய கடையை திறந்து வைத்தாரா?

உங்களிடம் இருக்கும் அதிகாரம் நிலையானது என்று நீங்கள் ஆடிக்கொண்டிருக்கிறீர்கள். பக்கத்திலிருக்கும் இலங்கையையும், வங்கதேசத்தையும் பாருங்கள். வங்கதேசத்தின் தந்தை முஜப்புர் ரஹ்மான் சிலை என்ன ஆனது என்று பாருங்கள். இப்போது அது எங்கே இருக்கிறது? ஆந்திராவில் ஜகன்மோகன் ரெட்டியும் இப்படியேத்தான் ஆடிக்கொண்டிருந்தார். எல்லாவற்றிற்கும் தனது தந்தை ராஜசேகர ரெட்டியின் பெயரை வைத்திருந்தார். ஆனால் சந்திரபாபு நாயுடு டெல்லியில் பதவியேற்றபோது ராஜசேகர ரெட்டியின் சிலையை இடித்து பொட்டலமாக்கிவிட்டனர். அதே நிலைமை இங்கும் உருவாகும். ஒரு நாள் இந்த அதிகாரம் நல்ல தன்மானம் உள்ள தமிழன் கையில் போனால், பொட்டலாகிவிடும் (கருணாநிதி சிலை)” என்று கூறியுள்ளார்.

கருணாநிதியின் சிலை இடிக்கப்படும் என்று சீமான் கூறியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. மட்டுமல்லாது தமிழ் தேசியம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்தால் கடற்கரையை, வெறும் கடற்கரையாகவே பார்க்கும்.. கல்லறைகளை பெயர்க்கும் என்றும் சீமான் கூறியுள்ளார். அதாவது, “எந்த குழப்பமும் இல்லை. நான் தமிழ் மகன். என் தேசம் தமிழ் தேசம். என் அரசியல் தமிழ் தேச அரசியல். நான் அதில் பாதி, இதில் பாதி கிடையாது. என் தேசம் இது. நாடு தமிழ்நாடு; அப்படி என்றால் தேசம் தமிழ் தேசம் தான். இங்கு வாழ்கின்ற மக்கள், அவர்களுடைய மொழி, கலை, இலக்கியம், பண்பாடு, வழிபாடு, கனிம வளம், நீர்வளம் இவற்றை காக்க வேண்டும். பெண்களுக்கு உரிமை, எல்லோருக்கும் கல்வி, கல்விக்கு ஏற்ற வேலை, வேலைக்கு ஏற்ற சம்பளம் என இதைக் கொண்டு பெருமை மிக்க வாழ்வு, தொழில் வளர்ச்சி, பொருளாதார வளர்ச்சி இது எல்லாம் கொண்டு ஒரு அரசியல் இருக்கிறது. இந்த அரசியல் தமிழ் தேச அரசியல். இப்போது சொல்லுங்கள் திராவிடம் என்றால் என்ன? திராவிட அரசியல் என்றால் என்ன? சொல்லச் சொல்லுங்கள். திராவிடம், தமிழ் தேசம் என்ற குழப்பம் எல்லாம், யாருடனாவது கூட்டணி வைத்து நிற்பதற்கு பயன்படும். இது ஒரு போர். இந்தியம் என்பதும் திராவிடம் என்பதும் கற்பிதம். இந்தியா என்கிற ஒரு நாட்டை உருவாக்கியது யார்? வெள்ளைக்காரன். பெயர் வைத்தது யார்? வெளைக்காரன் துப்பாக்கி முனையில் இந்தியா என சொல்ல வைத்தான். உயிரா, உரிமையா என்று கேட்டதற்கு உயிர் என்று இந்தியா என சொல்லிவிட்டார்கள். வெள்ளைக்காரன் பெத்து, பெயர் வைத்துவிட்டு சென்றதற்கு இவர்கள் அப்பன் முறை கொண்டாடி கொண்டு இருக்கிறார்கள். அது தான் இந்த திராவிடம். வசதியாக திருடுவதற்கு, பதுங்கி இருப்பதற்கு கொண்டு வந்தது தான் திராவிடம். திராவிடம் என்பது இனம், இடம் என்று சொல்லி கொண்டு இருந்தார்கள். கடைசியில் தமிழ்தேசமும், திராவிடமும் ஒன்றுதான் என்று சொல்லிவிட்டார்கள். அது எப்படி கொலைகாரனும், செத்து விழுகிறவனும் ஒன்றாக இருப்பார்கள். நான் எங்க அப்பன் செத்தால் உளமாற அழுவேன். நீ ஒப்புக்கு அழுவாய். நீயும் நானும் ஒன்னா? தமிழ்தேசம் கடற்கரையை கடற்கரையாக பார்க்கும். திராவிடம் கடற்கரையை கல்லறையாக்கும். தமிழ்தேசியம் அதை பெயர்த்து எறியும்” என்று கூறியுள்ளார்.

Trending News

Latest News

You May Like