1. Home
  2. தமிழ்நாடு

இன்று மாலை 6 மணிக்கு கருணாநிதி நுாற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயம் வெளியீடு..!

1

தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு தமிழக அரசின் தலைமை செயலாளர் சிவ்தாஸ் மீனா 'கருணாநிதி நினைவு நாணயம்' வெளியிட மத்திய அரசுக்கு கடந்தாண்டு ஜூலை 23ஆம் தேதி கடிதம் எழுதியிருந்தார்.

இதனை அடுத்து, நாணயம் வெளியிடுவதற்கான ஆயத்த பணிகள் முடிந்த நிலையில், நாணய வெளியீடு அனுமதி கடிதத்தில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையெழுத்திட்டுள்ளார். அதனை அடுத்து கருணாநிதியின் 100வது பிறந்த நாள் விழாவை உணர்த்தும் விதமாக 100 ரூபாய் நினைவு நாணயம், அதன் அமைப்பு, உள்ளடக்கம் விலை ஆகியவை முடிவு செய்யப்பட்டது.

அதன்படி, இந்த நாணயத்தை அச்சிடுவதற்கு கடந்த ஜூலை 12ஆம் தேதி மத்திய அரசிதழிலும் வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் நினைவு நாணயத்திற்கான மாதிரி வரைபடம் தமிழக அரசிடம் இருந்து பெறப்பட்டது.

மேலும், இந்த கருணாநிதி நினைவு நாணயத்தை மத்திய நிதி அமைச்சகத்தின் உத்தரவின்படி இந்திய ரிசர்வ் வங்கி அச்சடித்து வெளியிடுகிறது. இந்தி மற்றும் ஆங்கிலத்தில் 'டாக்டர் கலைஞர் மு.கருணாநிதி' என்ற பெயருடன், 'தமிழ் வெல்லும்' என்ற தமிழ் வாசகம் கருணாநிதி நினைவு நாணயத்தில் இடம்பெற்றுள்ளது.

இந்த நிலையில், இன்று 18ஆம் தேதி சென்னை, கலைவாணர் அரங்கில் நடைபெறும் விழாவில் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் 100 ரூபாய் நினைவு நாயணத்தை வெளியிட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், நாணயத்தைப் பெற்றுக் கொள்கிறார்.

இந்த விழாவில், தமிழக அமைச்சர்கள், தமிழக சட்டமன்றம் மற்றும் நாடாளுமன்றம் உறுப்பினர்கள், கூட்டணி கட்சியினர் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்ள உள்ளனர். விழா அழைப்பிதழ் கொடுக்கும் பணிகளை தமிழக அரசு அதிகாரிகள் செய்து வருகிறார்கள்.

கருணாநிதி நுாற்றாண்டு நினைவு 100 ரூபாய் நாணயத்தின் ஒரு புறம், இந்திய அரசின் சின்னம், மறுபுறம் கருணாநிதி படம் இடம் பெற்றுள்ளது. கருணாநிதி படத்தின் கீழ், 'தமிழ் வெல்லும்' என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. 'கலைஞர் கருணாநிதி நுாற்றாண்டு 1924 - 2024' என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.

Trending News

Latest News

You May Like