பவன் கல்யாணிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் கார்த்தி!
நடிகர் கார்த்திக்கு தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். தமிழில் அவரது படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது போலத் தெலுங்கிலும் அவரது படங்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இதையடுத்து, மெய்யழகன் படத்தின் தெலுங்கு வெளியீட்டிற்கான விளம்பரப்படுத்துதல் நிகழ்ச்சியில் நடிகர் கார்த்தி பங்கேற்றார்.
தற்போது ஆந்திரா முழுவதும் புகழ்பெற்ற திருப்பதி கோயிலின் பிரசாதமான லட்டு வழங்கப்படுகிறது, இந்த நிலையில், லட்டு தயாரிப்பதற்காகப் பயன்படுத்தப்பட்ட நெய்யில் மாட்டுக் கொழுப்பு மற்றும் பன்றி கொழுப்பு கலக்கப்பட்ட குற்றச்சாட்டு விஸ்வரூபம் எடுத்துள்ளது.
இந்தச் சூழலில், நடிகர் கார்த்தியின் மெய்யழகன் தெலுங்கு ப்ரமோஷன் நிகழ்ச்சியில் அவரிடம் சிறுத்தை படத்தில் இடம்பெற்ற லட்டு நகைச்சுவை காட்சியைக் காட்டி லட்டு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு நடிகர் கார்த்தி அது ஒரு சென்சிட்டிவான விவகாரம் அது. எனக்கு அது வேண்டாம். லட்டே வேண்டாம் என்றார். அவரது பேச்சுக்கு அங்கிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்துச் சிரித்தனர்.
அவரது பேச்சுகுறித்து ஆந்திர துணை முதலமைச்சரும், பிரபல நடிகருமான பவன் கல்யாண் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, லட்டை வைத்து நகைச்சுவை செய்கிறார்கள். திரைப்பட நிகழ்ச்சி ஒன்றில் கூடப் பேசினார்கள். லட்டு சென்சிட்டிவான விஷயம் என்று கூறியுள்ளார். ஒருபோதும் அப்படி கூறாதீர்கள். எப்போதும் அப்படி பேசக்கூட முயற்சிக்காதீர்கள். ஒரு நடிகராக உங்களை மதிக்கிறேன். ஆனால், சனாதன தர்மம் என்று வரும்போது ஒரு வார்த்தையைக் கூறும் முன்பு 100 முறை யோசிக்க வேண்டும்.” என்று கூறியுள்ளார்.
பவன் கல்யாண் தனது அதிருப்தியை வெளிப்படுத்திய நிலையில், நடிகர் கார்த்தி மன்னிப்பு கேட்டுள்ளார். இதுதொடர்பாக, கார்த்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது, பவன்கல்யாண் ஐயா, உங்களுக்கு ஆழ்ந்த மரியாதையுடன், எதிர்பாராத தவறான புரிதலுக்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். வெங்கடேசப் பெருமானின் தாழ்மையான பக்தன் என்ற முறையில், நான் எப்போதும் நம் மரபுகளை அன்புடன் பின்பற்றுகிறேன் என்று பதிவிட்டுள்ளார்.
நடிகர் சிரஞ்சீவியின் தம்பியான பவன் கல்யாணுக்கு அவரது அண்ணன் சிரஞ்சீவி அளவிற்கு லட்சக்கணக்கான ரசிகர்கள் தெலுங்கு திரையுலகில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், மெய்யழகன் படம் வெளியாக உள்ள நிலையில் இந்த விவகாரத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்பதற்காக நடிகர் கார்த்தி மன்னிப்பு கோரியுள்ளார்.