பவன் கல்யாணிடம் மன்னிப்பு கோரிய நடிகர் கார்த்தி..!
நடிகர்கள் கார்த்தி, அர்விந்த் சாமி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள படம் மெய்யழகன். 96 பட இயக்குனர் பிரேம் குமார் இயக்கியுள்ள இப்படம் தெலுங்கில் 'சத்யம் சுந்தரம்' (Satyam Sundaram) என்கிற பெயரில் வெளியாக உள்ளது. 2டி நிறுவனம் சார்பில் சூர்யா, ஜோதிகா இப்படத்தை தயாரித்துள்ளனர். இந்த படம் வருகிற செப்டம்பர் 27 ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள நிலையில், அதன் புரமோஷன் நிகழ்ச்சி செப்டம்பர் 23 ஆம் தேதி ஐதராபாத்தில் நடைபெற்றது. இதில் நடிகர் கார்த்தியும் கலந்துகொண்டார். அப்போது நிகழ்ச்சி தொகுப்பாளர் நடிகர் கார்த்தியிடம் 'லட்டு வேணுமா' என்று நகைச்சுவையாக கேட்டதற்கு, நடிகர் கார்த்தி அளித்த பதில் தான் சர்ச்சையாக வெடித்துள்ளது.
லட்டு என்பது இப்போது மிகவும் சென்சிடிவான ஒரு விஷயம்... அதைப் பற்றி பேசக்கூடாது என்று சிரித்துக் கொண்டே பதிலளித்தார். 'தற்போது லட்டு பற்றி பேசவே கூடாது' என்றும் கார்த்தி கூறி இருந்தார். தற்போது நாடு முழுவதும் லட்டு என்பது மிகவும் விவாத பொருளாக மாறிவிட்ட நிலையில் அதைப் பற்றி குறைவாக பேசுவதே நல்லது என்று கார்த்தி கருத்து தெரிவித்தார்.
லட்டு குறித்து நடிகர் கார்த்தி மற்றும் நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆகியோர் கூறிய கருத்துக்கள் ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாணுக்கு கோபத்தை ஏற்படுத்தியுள்ளது. "லட்டு பற்றி நகைச்சுவை பேசுறாங்க.. ஒரு பட விழாவுல லட்டு என்பது ஒரு முக்கியமான விஷயம்னு ஒரு ஹீரோ சொன்னாரு. மறுபடியும் இனிமே அப்படி சொல்லாதீங்க" என்று பவன் கல்யாண் அறிவுறுத்தினார்.
அதேபோல் ஒரு நடிகராக உங்களை நான் மிகவும் மதிக்கிறேன்.. ஏதாவது பேசறதுக்கு முன்னாடி.. நூறு தடவை யோசிச்சு பேசுங்க. சனாதன தர்மத்தை காப்பாத்துங்க" என்று பவன் கல்யாண் கூறினார். தற்போது நடிகர் கார்த்தி கூறிய கருத்துக்கள் தொடர்பான வீடியோ மற்றும் பவன் கல்யாண் பேசிய வீடியோ ஆகியவை சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன.
பவன் கல்யாண் கொடுத்த வார்னிங்கை அடுத்து நடிகர் கார்த்தி எக்ஸ் தளம் வாயிலாக மன்னிப்பு கேட்டுள்ளார். அதுகுறித்து அவர் போட்டுள்ள பதிவில், பவன் கல்யாண் அவர்களே உங்கள் மீது மிகுந்த மரியாதை வைத்திருக்கிறேன். நான் பேசியது ஏதாவது தவறாக புரிந்துகொள்ளப்பட்டு இருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். வெங்கடேஷ்வராவின் பக்தனாக எப்போதும் பண்பாட்டுடன் பிடிப்பாக இருக்கிறேன்” என குறிப்பிட்டுள்ளார்.