1. Home
  2. தமிழ்நாடு

கர்நாடக உயர்நீதிமன்றம் புதிய உத்தரவு! ஜெயலலிதா சொத்துக்கள் யாருக்கு?

1

ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வேதா இல்லத்தில் நடைபெற்ற சோதனையில் தங்கம் மற்றும் வைர‌ நகைகள், வெள்ளிப் பொருட்கள், கைக் கடிகாரங்கள் என ஏராளமான பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

சொத்துக் குவிப்பு வழக்கு விசாரணை கர்நாடகா நீதிமன்றத்தில் நடைபெற்றதால் பறிமுதல் செய்யப்பட்ட நகை உள்ளிட்ட பொருட்கள் அனைத்தும் அங்கிருந்த கருவூலத்தில் வைக்கப்பட்டன. எனினும், வழக்கின் தீர்ப்பு வருவதற்கு முன்பே ஜெயலலிதா உடல்நலக் குறைவால் 2016ஆம் ஆண்டு உயிரிழந்தார். சசிகலா, இளவரசி, திவாகரன் ஆகியோர் தண்டனை அனுபவித்து சிறையில் இருந்து வெளியே வந்தனர்.

தற்போது கர்நாடக கருவூலத்தில் ஜெயலலிதாவுக்கு சொந்தமான 17 கிலோ தங்கம், 7 கிலோ வெள்ளி நகைகள் 6 டிரங்கு பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ளன. ஜெயலலிதாவிடம் பறிமுதல் செய்யப்பட்ட பொருட்களை ஏலமிட வேண்டும் என்று நரசிம்ம மூர்த்தி பெங்களூரு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார். இந்த வழக்கில் ஜெயலலிதாவின் நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஆனால், இந்த சொத்துக்கள் அனைத்தும் தனக்கு சேர வேண்டியவை எனவும், சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவுக்கு தடை விதிக்கவும் ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபா கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், கர்நாடக சிறப்பு நீதிமன்றத்தின் வசம் இருக்கும் ஜெயலலிதாவின் அசையும், அசையா சொத்துக்களை, தமிழக லஞ்ச ஒழிப்பு துறையிடம் வழங்க இடைக்காலத் தடை விதித்து உத்தரவு பிறப்பித்தது.

இந்த வழக்கு கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தீபா தரப்பு, “சென்னை உயர்நீதிமன்றம் தீபாவை ஜெயலலிதாவின் வாரிசு என்று அறிவித்துள்ளது. அந்த வகையில் இந்த சொத்துகள் அனைத்தும் எங்கள் தரப்புக்கு சேர வேண்டும். ஆகவே, கணக்கில் காட்டப்பட்ட சொத்துக்களை எங்களிடம் ஒப்படைக்க வேண்டும்” என்று வாதம் வைக்கப்பட்டது.

வாதங்களை கேட்டுக்கொண்ட நீதிபதி, வழக்கு விசாரணையை வரும் ஜனவரி 3ஆம் தேதிக்கு தள்ளிவைத்து உத்தரவு பிறப்பித்தார். அதுவரை ஜெயலலிதாவின் சொத்துக்களை தமிழக அரசிடம் வழங்க விதிக்கப்பட்ட தடை நீட்டிக்கப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like