அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கப்படும் - கர்நாடக முதல்வர்..!
கன்னட மொழி பேசும் பகுதிகள் இணைந்ததைத் தொடர்ந்து 1956 நவம்பர் 1-ஆம் தேதி கர்நாடகா மாநிலம் உருவாக்கப்பட்டது. இதன் விளைவாக நவம்பர் 1-ஆம் தேதி, கர்நாடக ராஜ்யோத்சவா தினமாக கொண்டாடப்படுகிறது. இதைத் தொடர்ந்து கர்நாடக முதல்வர் தன்னுடைய எக்ஸ் தளத்தில், ”1973 நவம்பர் 1-ஆம் தேதி நமது மாநிலம், கர்நாடகா என பெயர் மாற்றம் செய்யப்பட்டு இன்றுடன் 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. கன்னடம் வட்டார மொழியாக மட்டுமல்லாமல், நாட்டின் ஒவ்வொரு வீட்டிலும் உள்ளவர்கள் பயன்படுத்தும் மொழியாக மாற வேண்டும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
இதைத் தொடர்ந்து நேற்று செய்தியாளர்களிடத்தில் பேசிய கர்நாடக முதல்வர் சித்தராமையா, “வேலைகளுக்கான போட்டித் தேர்வுகளை (competitive exams) இந்தி அல்லது ஆங்கிலத்தில் எழுத வேண்டும் என்ற மத்திய அரசின் முடிவை நாங்கள் எதிர்க்கிறோம். இதுபோன்ற தேர்வுகளை கன்னட மொழியிலும் நடத்த வேண்டும். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசை ஏற்கெனவே வலியுறுத்தியுள்ளேன். தேவைப்பட்டால், மீண்டும் ஒரு முறை மத்திய அரசுக்கு கடிதம் எழுதுவேன்.
கர்நாடகாவில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் இலவச மின்சாரம் மற்றும் குடிநீர் வழங்கப்படும். இது கன்னட வழிப் பள்ளிகளில் உள்ள உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்கான முயற்சிகளின் ஒரு பகுதியாகும்" என்றார். மத்திய அரசின் பெரும்பாலான தேர்வுகள் இந்தி மற்றும் ஆங்கிலத்தில் நடத்தப்படுவதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டிவருவது குறிப்பிடத்தக்கது.