1. Home
  2. தமிழ்நாடு

கப்பலூர் சுங்கச்சாவடி - உள்ளூர் மக்களுக்கு தற்காலிக விலக்கு..!

1

திருமங்கலம் அருகே கப்பலூரில் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்குற்பட்ட டோல்கேட்டில் ஜூலை 10ம் தேதி முதல் திருமங்கலம் உள்ளூர் வாடகை வாகனங்கள் அனைத்தும் 50 சதவீதம் சுங்ககட்டணம் செலுத்திதான் டோல்கேட்டை கடந்து செல்லவேண்டும் என தேசிய நெடுஞ்சாலைத்துறை ஆணையம் அறிவித்தது. இது திருமங்கலம் உள்ளூர் மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து கப்பலூர் டோல்கேட் எதிர்ப்பு ஒருங்கிணைப்பு குழுவினர், பல்வேறு சங்கங்கள் கப்பலூர் டோல்கேட்டை தங்களது வாகனங்களுடன் முற்றுகையிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.  

தொடர்ந்து பிற்பகல் பொக்லைன் இயந்திரத்துடன் டோல்கேட்டை இடிக்க ஆர்ப்பாட்டக்காரர்கள் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தினர். இந்த விவகாரத்தில் அமைதி பேச்சுவார்த்தை வரும் 15ம் தேதி திருமங்கலத்தில் நடைபெற உள்ளது. கூட்டத்தில் டோல்கேட் விவகாரத்தில் முக்கிய முடிவு எடுக்கப்படுமென்றும், அதுவரை திருமங்கலம் பகுதி வாகனங்கள் கட்டணமின்றி சென்று வரலாம் என முடிவு செய்யப்பட்டது. 

இந்நிலையில்,  திருமங்கலம் கப்பலூர் சுங்கச்சாவடி விவகாரத்தில் அமைச்சர் மூர்த்தி தலைமையில் முத்தரப்பு பேச்சுவார்த்தை இன்று நடைபெற்றது. உள்ளூர் வாகனங்களுக்கு விலக்குதரக் கோரி நடந்த போராட்டம் எதிரொலியாக ஆட்சியர் அலுவலகத்தில் இன்று பேச்சுவார்த்தை நடைபெற்றது. கூட்டத்தில் அமைச்சர் மூர்த்தி, மாவட்ட ஆட்சியர், தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் பங்கேற்றனர்.கப்பலூர் சுங்கச்சாவடி உள்ளூர் வாகன விலக்கு விவகாரத்தில் தேசிய நெடுஞ்சாலை செயலருடன் அடுத்த வாரம் மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

மேலும் தற்காலிகமாக உள்ளூர் வாகனங்களுக்கு முழு விலக்களிக்கும் நடைமுறை தொடரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. 

Trending News

Latest News

You May Like