இந்த 5 நாட்கள் கன்னியாகுமரி கண்ணாடிப் பாலம் மூடப்படுகிறது... சுற்றுலா பயணிகள் செல்ல தடை!

கன்னியாகுமரிக்கு தமிழகத்தின் பிற மாவட்டங்கள், இந்தியாவின் பிற மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து செல்கின்றன. குறிப்பாக விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் கூட்டம் குமரியில் உள்ள சுற்றுலா தலங்களில் அலைமோதும்.
இங்கு கடல் நடுவே கம்பீரமாக அமைந்துள்ள விவேகானந்தர் பாறை, திருவள்ளுவர் சிலை புகழ்பெற்றது. இதனை சுற்றுலா பயணிகள் ஆர்வத்துடன் ரசித்து செல்கின்றனர். கன்னியாகுமரி மாவட்டத்தின் முக்கிய சுற்றுலா அம்சங்களில் ஒன்றான, விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலையை இணைக்கும் இந்தக் கண்ணாடி பாலத்தை காண ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை தருவது வழக்கம்.
இந்த பாலத்தின் வழியாக பயணித்து, கடல் தோற்றத்தை ரசிக்க வரும் பயணிகள் எண்ணிக்கையிலும் சமீபகாலமாக அதிகரித்து காணப்படுகிறது. கடந்த ஜனவரி மாதத்தில் மட்டும் 2,15,000 பேர் மற்றும் பிப்ரவரி 17ஆம் தேதி வரையிலான கால கட்டத்தில் 1,24,000 பேர் என மொத்தமாக 3,39,000 பயணிகள் இந்த பாலத்தினைப் பார்வையிட்டுள்ளனர்.
பாலத்தின் நிலைத் தன்மையை ஆய்வு செய்வதற்காக, மத்திய அரசு பொதுத் துறை நிறுவனமான ரைட்ஸ் மற்றும் அண்ணா பல்கலைக் கழகம் சேர்ந்த தொழில்நுட்பக் குழு 5 நாட்கள் ஆய்வு பணியில் ஈடுபட உள்ளது.
இதனால், இந்த ஆய்வு நடைபெறும் நாள்களில் (ஏப்.15 - ஏப்.19), பொதுமக்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் கண்ணாடிப் பாலத்தில் நுழைய அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே, இந்நாட்களில் பயணம் திட்டமிட்டிருக்கும் சுற்றுலா பயணிகள் தங்களது திட்டங்களை மாற்றிக் கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.