1. Home
  2. தமிழ்நாடு

ஆதாரத்துடன் குற்றம்சாட்டும் கனிமொழி..! கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழாசிரியர்கள் எண்ணிக்கை ‘0’..!

1

மக்களவையில் திமுக எம்.பி கனிமொழி, தமிழ்நாட்டில் உள்ள கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தற்போது பணிபுரியும் தமிழ், இந்தி மற்றும் சமஸ்கிருத ஆசிரியர்களின் எண்ணிக்கை விவரங்களை கேட்டிருந்தார்.


இதற்கு எழுத்துப்பூர்வமாக பதில் அளித்த மத்திய கல்வித் துறை இணையமைச்சர், “கேந்திரிய வித்யாலயாக்களில் மாணவர்கள் விரும்பும் தமிழ் மொழியை கற்பிக்க பகுதி நேர ஒப்பந்த அடிப்படையில் 24 ஆசிரியர்கள் பணிபுரிகின்றனர். தற்போது தமிழ்நாட்டில் 86 இந்தி மற்றும் 65 சமஸ்கிருத ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்” என்று குறிப்பிட்டு இருந்தார். அதாவது ஒரு நிரந்தர தமிழ் ஆசிரியர்கள் கூட இல்லை என்பதுதான் அதன் பொருள்.


இதனை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த கனிமொழி, “தமிழகத்தில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழ் கற்பிக்க நியமிக்கப்பட்டுள்ள நிரந்தர ஆசிரியர்களின் எண்ணிக்கை என்ன என்ற கேள்விக்கு ஒன்றிய அரசு அளித்துள்ள பதில் “0”. அதே சமயம், இந்தி கற்பிக்க 86 ஆசிரியர்களும், சமஸ்கிருதம் கற்பிக்க 65 ஆசிரியர்களும் இருப்பதாகக் கூறுகிறது” என்று சுட்டிக்காட்டியுள்ளார்.


அரசியலமைப்பு சட்டத்தில் இந்தியோ அல்லது சமஸ்கிருதமோ தேசிய மொழி என்று வரையறுக்கப்பட்டுள்ளதா என்று கேள்வி எழுப்பிய அவர், அல்லது பாஜக கட்டமைக்க விரும்பும் தேசியம் என்பது அதுதானா என்றும் கேட்டுள்ளார்.


மேலும், “கேந்திரிய வித்யாலயா வழியாக எந்த தாய்மொழியைக் காக்கிறீர்கள் அல்லது கற்றுக்கொடுக்கிறீர்கள்? மும்மொழிக் கொள்கை என்ற போர்வையில் இப்படி இந்தியையும், சமஸ்கிருதத்தையும் திணிப்பதைத்தான் காலம் காலமாக திமுக எதிர்க்கிறது” என்றும் கனிமொழி காட்டமாகத் தெரிவித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசுக்கு காங்கிரஸின் செல்வப்பெருந்தகையும் கண்டனம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Trending News

Latest News

You May Like