ஈரோட்டில் தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்..!
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி இணைந்துள்ளது . எனினும், மநீம மக்களவைத் தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக மாநிலங்களவை தேர்தலில் அக்கட்சிக்கு ஒரு சீட் ஒதுக்கீடு செய்யப்படும் என்று திமுக ஒப்பந்தம் செய்துள்ளது. இந்தநிலையில், 2024 மக்களவைத் தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியை ஆதரித்து மநீம தலைவர் கமல்ஹாசன் தேர்தல் பிரச்சார சுற்றுப்பயண விபரங்களை அக்கட்சி வெளியிட்டுள்ளது.
அதன்படி மநீம தலைர் கமல்ஹாசன், வரும் மார்ச் 29-ம் தேதி திமுக கூட்டணியை ஆதரித்து தனது பிரச்சாரத்தை தொடங்குகிறார். ஏப்ரல்-16-ம் தேதி அவர் தனது பிரச்சாரத்தை நிறைவு செய்வார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் பிரச்சார சுற்றுப்பயண அட்டவணை:
மார்ச் 29 - ஈரோடு
மார்ச் 30 - சேலம்
ஏப்ரல் 2 - திருச்சி
ஏப்ரல் 3 - சிதம்பரம்
ஏப்ரல் 6 - ஸ்ரீபெரும்புதூர், சென்னை
ஏப்ரல் 7 - சென்னை
ஏப்ரல் 10 - மதுரை
ஏப்ரல் 11 - தூத்துக்குடி
ஏப்ரல் 15 - கோவை
ஏப்ரல் 16 - பொள்ளாச்சி ஆகிய தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
முன்னதாக, தேர்தல் பிரச்சார வழிகாட்டுதல் கூட்டம் சென்னையில் இன்று நடைபெற்றது. அந்தக் கூட்டத்தில் பேசிய அவர், நான் எனது எதிரி யார் என்பதை முடிவு செய்துவிட்டேன். என் நினைவு தெரிந்ததில் இருந்து நினைவு போகும் வரை எனது அரசியல் எதிரி சாதியம்தான். இந்த தேர்தல் இந்தியாவுக்கானது. தமிழகத்துக்கான களம் 2026-ல் அமையப் போகிறது. மக்கள் நீதி மய்யத்தின் தற்போதைய அரசியல் நிலைப்பாட்டை தியாகம் என்பதைவிட வியூகம் என்று புரிந்துகொள்ள வேண்டும் என்று பேசியிருந்தார்.