1. Home
  2. தமிழ்நாடு

மையம் சார்பாக கமலஹாசன் முதல்வர் வேட்பாளர்! ரஜினியின் ஆதரவு கிடைக்குமா?

மையம் சார்பாக கமலஹாசன் முதல்வர் வேட்பாளர்! ரஜினியின் ஆதரவு கிடைக்குமா?


தமிழக சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தல் பணிகளை தொடங்க உள்ளதாக மக்கள் நீதி மய்யம் தெரிவித்துள்ளது.

மக்கள் நீதி மையம் கட்சித் தலைவர் கமலஹாசன் தலைமையில் சென்னை தியாகராய நகரில் மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மைய கட்சியின் துணைத் தலைவர் மகேந்திரன், தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலில் மக்கள் நீதி மையம் கட்சி தலைவர் கமலஹாசனை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தி தேர்தல் பணிகளை இன்று முதல் தொடங்க உள்ளோம்.

மேலும், இன்றைய கூட்டத்தில் தமிழகத்தின் அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு எடுக்கவும், வேட்பாளர்கள் தேர்வு செய்வதற்கான முழு அதிகாரத்தையும் கட்சியின் தலைவரான கமலஹாசனுக்கு வழங்கப்பட்டுள்ளது என்றார். பின்னர் பேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அருணாச்சலம், தேர்தல் தொடர்பான பணிகளை தொடங்க, தேர்தல் பணிக்குழு, தேர்தல் அறிக்கை தயாரிக்கும் குழு, உள்ளிட்ட பல்வேறு குழுக்களை அமைப்பது தொடர்பாக முடிவு செய்யப்பட்டதாக தெரிவித்தார். மேலும், தமிழக அரசு கிராமசபை கூட்டம் நடத்தாமல் தொடர்ந்து காலம் தாழ்த்தி வருவதாகவும், எனவே மக்கள் நீதி மையம் கட்சி சார்பில் கிராமசபை கூட்டங்களை உடனடியாக நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிடக் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளதாகவும் கூறினார்.

தான் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை என்றும், தான் முதல்வர் வேட்பாளர் கிடையாது... கட்சி மட்டுமே தன் பொறுப்பில் இருக்கும் என்று அறிவித்த ரஜினி, தேவைப்பட்டால் கமலுடன் இணையவும் தயார் என்று கூறியிருந்தார். கொரோனா தொற்று, அரசியல் மாறுதல் என்று வெகு விரைவில் சட்டமன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் இச்சூழலில், ரஜினியின் ஆதரவு தன் நண்பர் கமலுக்கு கிடைக்குமா என்பது மில்லியன் டாலர் கேள்வியாக இருக்கிறது. ரஜினி, கமல் இணைந்தால், கமல் தான் முதல்வர் வேட்பாளர் என்று நடிகை ஸ்ரீ ப்ரியா கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Trending News

Latest News

You May Like