பாடலாசிரியர் சினேகன் தந்தை காலமானார் : கமல்,அன்புமணி இரங்கல்..!
தமிழ் சினிமாவின் முக்கிய பாடலாசிரியர்களில் ஒருவர் சினேகன். இவரது தந்தை சிவசங்கு தஞ்சாவூர் புது காரியாபட்டியில் உள்ள இல்லத்தில் வயது மூப்பு காரணமாக இன்று காலமானார்.
சிவசங்குவிற்கு 7 மகன்கள், 1 மகள். சினேகன் தான் கடைசி மகன் (8வது பிள்ளை). தமிழ் சினிமாவில் 'புத்தம் புது பூவே' என்ற படத்தின் மூலம் திரையுலகில் பாடலாசிரியராக அறிமுகமானவர் சினேகன். இவர் இதுவரை 2500-க்கும் அதிகமான பாடல்களை எழுதி உள்ளார். கவிஞர் மட்டுமின்றி, நடிகர், அரசியல்வாதி என பன்முகங்களை கொண்டவர்.
பாடலாசிரியர் சினேகன் தந்தை மறைவுக்கு திரை உலகினர், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் இரங்கல் தெரிவித்துள்ளார். அதில், "திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞருமான சினேகனின் தந்தை சிவசங்கு அவர்கள் முதுமை காரணமாக தஞ்சாவூர் புது காரியாபட்டியில் இன்று காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.
சிவசங்கு அவர்கள் அண்மையில் தான் நூற்றாண்டு விழா கொண்டாடினார். அதற்குள்ளாக அவர் மறைந்திருப்பது கவிஞர் சினேகனுக்கு எவ்வளவு துயரத்தை ஏற்படுத்தியிருக்கும் என்பதை நான் அறிவேன்.
தந்தை சிவசங்கு அவர்களை இழந்து வாடும் கவிஞர் சினேகன் மற்றும் அவரது குடும்பத்தினர் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என்று தெரிவித்துள்ளார்.
கவிஞர் சினேகனின் தந்தை மறைவுக்கு கமல்ஹாசன் இரங்கல் தெரிவித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், "என்னுடைய அன்புக்குரிய தம்பியும், மக்கள் நீதி மய்யம் கட்சியின் மாநில இளைஞரணிச் செயலாளருமான கவிஞர் சினேகன் அவர்களது தந்தையார் சிவசங்கு அவர்கள் மறைந்த செய்தி கேட்டு மிகுந்த துயருற்றேன். தம்பி சினேகனுக்கும் அவர்தம் குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன்." என்று பதிவிட்டுள்ளார்.
.png)