இன்று மதுரைக்கு புறப்படுகிறார் கள்ளழகர்..!
கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா வரும் 28-ம் தேதி வரை நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று முன்தினம் மாலை தோளுக்கினியான் பல்லக்கில் சிறப்பு அலங்காரத்தில் சுந்தரராஜப் பெருமாள் எழுந்தருளினார். அப்போது நடைபெற்ற சிறப்பு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர். நேற்று தோளுக்கினியானில் சுவாமி புறப்பாடு நடைபெற்றது.
இன்று 21-ம் தேதி கொண்டப்ப நாயக்கர் மண்டபத்திலிருந்து சுவாமி சுந்தரராஜப் பெருமாள், கள்ளழகர் திருக்கோலத்தில் மதுரைக்குப் புறப்படுகிறார். அதை தொடர்ந்து நாளை 22-ம் தேதி மூன்றுமாவடியில் எதிர்சேவை நடைபெறுகிறது.
அன்று இரவு தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி கோயிலில் சுவாமி தங்குகிறார். தொடர்ந்து வரும் 23-ம் தேதி கள்ளழகர் வைகை ஆற்றில் தங்கக் குதிரை வாகனத்தில் அதிகாலை 5.51 மணிக்கு மேல் 6.10 மணிக்குள் எழுந்தருள்கிறார்.
பின்னர் ராமராயர் மண்டபத்தில் தண்ணீர் பீய்ச்சுதல் வைபவம், அண்ணா நகர் வழியாக பல்வேறு மண்டகப் படிகளில் எழுந்தருளும் நிகழ்வுகள் நடைபெறும். இரவு வண்டியூர் வீரராகவப் பெருமாள் கோயிலில் சுவாமி தங்குகிறார்.
வரும் 24-ம் தேதி வண்டியூர் வைகை ஆற்றில் உள்ள தேனூர் மண்டபத்தில் மண்டூக மகரிஷிக்கு கள்ளழகர் மோட்சம் அளிக்கிறார். இரவு ராமராயர் மண்டபத்தில் தசாவதாரம் நடைபெறும். தொடர்ந்து 25-ம் தேதி பூப்பல்லக்கில் சுவாமி எழுந்தருள்கிறார். வரும் 26-ம் தேதி கள்ளழகர் மதுரையிலிருந்து அழகர் மலைக்குப்புறப்படுகிறார். வரும் 27-ம் தேதி இருப்பிடம் சேருகிறார். தொடர்ந்து 28-ம் தேதி உற்சவ சாற்று முறையுடன் திருவிழா நிறைவு பெறுகிறது.
விழா ஏற்பாடுகளை கோவில் துணை ஆணையர் கலைவாணன், அறங்காவலர் குழுத் தலைவர் வெங்கடாசலம் மற்றும் அறங்காவலர்கள், கோவில் பணியாளர்கள் சிறப்பாக செய்து வருகின்றனர்.