கள்ளக்குறிச்சி விஷச் சாராயம் மரணங்கள் : ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவிப்பு..!
கள்ளக்குறிச்சி கருணாபுரம் பகுதியில் விஷச்சாராயம் அருந்திய பலர் அடுத்தடுத்து உயிரிழந்து வருகின்றனர். கள்ளச்சாராயம் அருந்திய நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு அடுத்தடுத்து வாந்தி, வயிற்றுப்போக்கு, கை-கால் மருத்துபோதல், கண் பார்வை மங்குதல் போன்ற பிரச்சனை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து பலரும் அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். நேற்று பிற்பகலில் 4 பேர் உயிரிழந்ததாக முதலில் செய்திகள் வெளியாகின. பின்னர் அடுத்தடுத்து சில மணி நேரங்களிலேயே உயிரிழப்பு இருமடங்காக உயர்ந்தது.
இன்று காலை 11 மணி நிலவரப்படி 37 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 90 பேர் கள்ளக்குறிச்சி, சேலம், விழுப்புரம், புதுச்சேரி அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 10க்கும் மேற்பட்டோரை கைது செய்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு தலா ₹10 லட்சம் நிவாரணமும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களுக்கு தலா ₹50,000 நிவாரணமும் வழங்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மேலும் இச்சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை மேற்கொள்ள ஓய்வு பெற்ற நீதியரசர் கோகுல் தாஸ் தலைமையில் விசாரணை ஆணையம் அமைத்து அறிக்கை சமர்ப்பிக்கவும் முதலமைச்சர் ஆணையிட்டுள்ளார்.