கள்ளக்குறிச்சி விஷ சாரய பலிக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு: வழக்கை தள்ளுபடி செய்தது ஐகோர்ட்..!
கள்ளக்குறிச்சியில் விஷ சாரயம் அருந்தி 67 பேர் பலியாகினர். இதில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக அரசு ரூ.10 லட்சம் இழப்பீடு அறிவித்தது. இதை எதிர்த்து சென்னை விருகம்பாக்கத்தைச் சேர்ந்த குமரேஷ் என்பவர் ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
அதில், விஷ சாரயம் அருந்துவது சட்ட விரோதமான செயல். சாகித்ய அகாடமி விருது பெறும் எழுத்தாளர்களுக்கு கூட ரூ. ஒரு லட்சம் மட்டுமே ஊக்கத் தொகை அளிக்கப்படுகிறது. அரசு ஊழியர்கள் பணியின் போது உயிரிழக்க நேரிட்டால் ரூ. 2 லட்சம் மட்டுமே வழங்கப்படுகிறது.
இந்நிலையில், விஷ சாரயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு மட்டும் ரூ. 10 லட்சம் இழப்பீடு வழங்குவது சட்ட விரோத செயலை ஊக்கப்படுவது போல் ஆகி விடும்.
கள்ளக்குறிச்சியில் விஷ சாராயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடாக ரூ. 10 லட்சம் வழங்குவதன் மூலம் சுமார் ரூ. 6.5 கோடி, மக்களின் வரிப்பணம் வீணாக செலவிடப்பட்டுள்ளது.
அவ்வளவு தொகையை செலவு செய்ய உயிரிழந்தவர்கள் யாரும் தியாகிகள் கிடையாது. எனவே, கள்ளச் சாரயம் அருந்தி உயிரிழந்தவர்களுக்கு ரூ. 10 லட்சத்தை இழப்பீடாக அரசு வழங்கக் கூடாது என உத்தவிட வேண்டும் எனக் கோரியிருந்தார்.
இந்த வழக்கு நேற்று நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், என். செந்தில் குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், இந்த வழக்கு விளம்பர நோக்கதுடன் தொடரப்பட்டுள்ளது. இழப்பீடு வழங்குவது என்பது அரசின் முடிவு அதில் நீதிமன்றம் தலையிட முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.