விஜய்யை விமர்சித்த கி.வீரமணி.!

திமுக ஆட்சியை அகற்ற அதிமுகவும் பாஜகவும் கைகோர்த்து கடந்த மாதம் கூட்டணி அறிவித்துவிட்டன. கூட்டணியில் நீடிப்பதாக ஓபிஎஸ் அணி, அமமுக, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சிகள் அறிவித்துவிட்டன. இதில் பாமக, தேமுதிக உள்பட மற்ற கட்சிகளையும் அழைத்து வர பேச்சுவார்த்தைகள் நடந்து வருகின்றன.
நாம் தமிழர் கட்சி 234 தொகுதிகளிலும் தனித்தே போட்டி என அதிகாரப்பூர்வமாக அறிவித்துவிட்டது. தவெகவும் தற்போது தனி அணி அமைத்துப் போட்டியிடும் முடிவில் உள்ளது. இதனால் வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழகத்தில் நான்கு முனை போட்டி இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி, கொள்கை எதிரிகளோடு கூட்டணி வைக்கும் கட்சிகள் மற்றும் சினிமா ரசிகத் தன்மையை அரசியலாக்கும் கட்சிகளால் திமுக ஆட்சியை அசைக்க முடியாது என்று குறிப்பிட்டுள்ளார்.
தமிழ்நாட்டில் இரண்டாவது செல்வாக்குள்ள கட்சி திராவிட லேபிள் ஒட்டிக்கொண்டு, அதன் அடிப்படைத் தத்துவத்திற்கு வெடி வைத்து, கொள்கை எதிரிகளிடம் தங்களது அமைப்பை அடமானம் வைத்ததோடு, அதற்காக கொஞ்சம் கூட வெட்கப்படாமல், வீராப்புப் பேசி, ஊடக விளம்பர வெளிச்ச தயவுகளால் அன்றாடம் அரசியல் உலா வருகின்றனர் என்றும் அதிமுகவை மறைமுகமாக விமர்சனம் செய்தார்.
படங்களில் நடித்துக் கிடைத்த ரசிகர் மன்றம், பணத்தை வைத்து முதலமைச்சர் நாற்காலிக்கே குறி வைத்து சிலர் கற்பனை உலகில் இருப்பதாகவும், ஊடக வெளிச்சத்தில் விளம்பரங்கள் பெற்று ஆட்சிக் கனவில் வேடிக்கை அரசியல் செய்து வருவதாக நடிகர் விஜய்யையும் மறைமுகமாகக் சாடினார்.
இவர்கள் மறைமுக கண்ஜாடை காட்டுதலின்படி திமுக ஆட்சி, முதல்வர் ஸ்டாலின் மீது முறையான விமர்சனம் செய்யாமல் வெறும் அவதூறுகளை அன்றாடம் அள்ளி வீசி வருகின்றனர் என்றும், நிதி ஆயோக் கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டதற்கு உள்நோக்கம் கற்பித்து வரும் எதிர்க்கட்சிகளுக்கு அதற்கான ஏதாவது ஒரு ஆதாரம் உள்ளதா என்றும் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சிகள் முதல்வரை விமர்சனம் செய்வது ஊடகங்களுக்கு வேண்டுமானால் தீனியாக மாறலாம்.. ஆனால், அது கவைக்குதவாது என்பது விரைவில் தெரியவரும். ஆர்எஸ்எஸ் வியூகம் மறுபடியும் தமிழ்நாட்டில் மிகப்பெரிய அளவில் தோற்பது உறுதி. திராவிடம் வெல்லும் என்பதை வரலாறு சொல்லும் என்று குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் அண்மையில் டெல்லி சென்று மோடி தலைமையிலான நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டார். ஆனால், அமலாக்கத் துறை ரெய்டு தொடர்பாக தனது குடும்பத்தைக் காக்க டெல்லி தரப்பை சமாதானப்படுத்தவே ஸ்டாலின் டெல்லி சென்றதாக எடப்பாடி பழனிசாமி, விஜய் உள்ளிட்டோர் குற்றம்சாட்டி இருந்தனர். இந்த நிலையில்தான் இருவரையும் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்.