முத்திரைத் தாள் கட்டண உயர்வு - இபிஎஸ் கண்டனம்..!
இனிமேல் 20 ரூபாய்க்கு பத்திரம் வாங்க முடியாது என்பதால், அந்த பத்திரம் இனி 200 ரூபாய் ஆக உயர்ந்துள்ளது.. இதேபோலவே பல்வேறு இனங்களுக்கு முத்திரைத்தாள் கட்டணங்கள் தற்போது உயர்ந்துள்ளதாக சோஷியல் மீடியாவில் தகவல்கள் வெளியாகி வருகின்றன.
இந்த தகவலை குறிப்பிட்டு அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் அறிக்கை ஒன்றையும் வெளியிட்டிருக்கிறார். அதில், "தத்தெடுப்பது, பிரமாணப் பத்திரம், உடன் படிக்கை, சங்கம் பதிவுக்கான கட்டணம் என பெரும்பாலான முத்திரைத் தாள் கட்டணத்தை கடந்த ஆண்டு பல மடங்காக திமுக அரசு உயர்த்தியது. தற்போது சிறிய அளவிலான பண மதிப்புடைய முத்திரைத் தாள் கட்டணத்தையும் திமுக அரசு உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
ஆட்சிக்கு வந்த மூன்றரை ஆண்டுகளில் பத்திரப்பதிவு கட்டணம், நில வழிகாட்டி மதிப்பு, வீடு வரைபட அனுமதிக் கட்டணம், முத்திரைத்தாள் கட்டணம் என அனைத்து விதமான கட்டணங்களையும் திமுக அரசு உயர்த்தியிருக்கிறது. இதனால் ஏழை,எளிய மக்களின் சொந்த வீடு எனும் கனவு முற்றிலுமாக தகர்ந்துள்ளது.
பொதுமக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் முத்திரைத்தாள் கட்டண உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இனி வரும் காலங்களில் மக்களின் மீது சுமையை ஏற்றாமல் பத்திரப் பதிவுத்துறையின் வருவாயைப் பெருக்க ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்" என்று தமிழக அரசுக்கு டிடிவி தினகரன் வலியுறுத்தியிருக்கிறார்.
இதுதொடர்பாக எடப்பாடி பழனிச்சாமி தனது எக்ஸ் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
‛‛பத்திரப்பதிவு துறையின் 20 வகையான சேவைகளுக்கான முத்திரைத்தாள் கட்டணத்தை விடியா திமுக அரசு உயர்த்தியுள்ளதாக செய்திகள் வருகின்றன. சொத்து என்ற சாமானியனின் கனவை சாத்தியப்படுத்த உறுதுணையாக இருக்கவேண்டிய அரசே, முத்திரைத் தாள் கட்டண உயர்வு மூலம் முட்டுக்கட்டை போடுவது கடும் கண்டனத்திற்குரியது. தனது நிர்வாகத் திறமையின்மையால் ஏற்படும் பொருளாதார பாரத்தை மக்களின் தலைகளில் ஏற்றும் ஸ்டாலினின் திமுக அரசு, உடனடியாக முத்திரைத் தாள் கட்டண உயர்வைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறேன்'' என்று கூறியுள்ளார்.