IT மக்களுக்கு வரப்பிரசாதம் - ஒரு நாளைக்கு வெறும் ரூ.100 தான்..!
கொரோனா காலத்தில் வீட்டில் இருந்தபடியே பணி செய்வது எல்லாம் சர்வசாதரணமாக மாறிவிட்டது. ஆன்லைன் மூலமாக வீட்டிலிருந்தபடியே பணி செய்வதை இன்னும் பல நிறுவனங்கள் ஊக்குவித்துகொண்டுள்ளன.
இதேபோல் புதிதாக தொழில் துவங்கும் தொழில்முனைவர்கள் பலர் இடம் வசதி இல்லாமல் சிரமம் அடைந்துவருவதை உணர்ந்த தனியார் நிறுவனங்கள் பலர் பகிர்வு பணியிட மையம் (Co-Working Space ) நடத்தி வருகின்றன. இதை கருத்தில் கொண்டுதான் தமிழகத்தில் முதல் முறையாக அரசு சார்பில் சென்னை கொளத்தூர் தொகுதி அகரம் ஜெகன்நாதன் தெருவில் வட சென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் சென்னை மாநகராட்சி மற்றும் சென்னை வளர்ச்சிக் குழுமமும் இணைந்து ரூ 2.85 கோடி மதிப்பீட்டில் பகிர்வு பணியிட மையம் கட்டுப்பட்டுள்ளது.
இந்த மையத்திற்கு முதல்வர் படைப்பகம் என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த பகிர்வு பணியிட மையத்தை தமிழக முதல்வர் கடந்த 4 ஆம் தேதி திறந்து வைத்தார். இதில் தொழில் முனைவர்களுக்கான பகிர்வு பணியிட மையம் , போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள்,மாணவிகளுக்காக அனைத்து உள்கட்டமைப்பு வசதியுடன் கூடிய கல்வி மையம், உணவு அருந்துவதற்கான இடம் என ஏசி,கணிணி,வைஃபை வசதியுடன் முதல்வர் படைப்பகம் அமைக்கப்பட்டுள்ளது. முதல்வர் படைப்பகத்தை நிர்வகிக்கும் பொறுப்பு தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
"போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு படிக்கும் நல்ல சூழ்நிலையை உருவாக்கி தர வேண்டும் என்ற நோக்கில் தான் முதல்வர் படைப்பகம் துவக்கப்பட்டுள்ளது. முதல் தளத்தில் கல்வி மையம் இருக்கிறது இதில், போட்டி தேர்வுக்கு தயாராகும் மாணவ -மாணவிகள் ஒரே நேரத்தில் 51 பேர் படிக்கும் வகையிலும்,அவர்களுக்கு தேவையான புத்தகங்களும் இடம்பெற்றுள்ளது.
வீட்டில் படிக்க கூடிய சூழல் இல்லாத மாணவர்கள் இங்கு முதல்வர் படைப்பகத்தை பயன்படுத்தி கொள்ளலாம். 3 மணி நேரத்திற்க்கு 5 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்குள்ள புத்தகத்தை மாணவர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். காலை 6 மணியிலிருந்து இரவு 11.00 மணி வரை முதல்வர் படைப்பகம் திறந்திருக்கும்.
தொழில் முனைவர்களுக்கான பகிர்வு பணியிட மையம் கீழ்தளத்தில் உள்ளது. தொழில் முனைவர்கள் ஆரம்ப கட்டத்தில் எந்த தொழிலையும் செய்வதாக இருந்தாலும் அவர்களுக்கான இடத்திற்கான வாடகை, மின்சார கட்டணம் அவையெல்லாம் அவர்களால் கொடுக்க முடியாத நிலையில் இருப்பார்கள். இதுபோன்ற புதிதாக தொழில் துவங்க உள்ளவர்களுக்கு இருக்கும் வாடகை பணப் பிரச்சனைகளிலிருந்து விடுப்படும் வகையில் நல்ல சூழ்நிலையல் இடம், ஏ,சி, இலவச வைஃபை ஆகிய அனைத்து வசதிகளும் அமைத்து தந்துள்ளோம். ஒரே நேரத்தில் தொழில் முனைவர்கள் 38 பேர் அமர்ந்து பணிப்புரியும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும் கீழ்தளத்தில் ஆலோசனைகள் செய்யும் வகையில் 3 கலந்தாய்வு கூடமும் அமைந்துள்ளது. ஒரு கலந்தாய்வு கூடத்தில் 6 பேரும்,மற்ற இரண்டு கலந்தாய்வு கூடத்தில் தலா 4 பேரும் அமர்ந்து ஆலோசனை செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். ஒரு மணி நேரத்திற்க்கு கலந்தாய்வு கூடத்திற்க்கு 150 முதல் 250 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தொழில் முனைவர்களுக்கு அரைநாளுக்கு 50 ரூபாயும் ஒரு நாளிற்க்கு 100 ரூபாயும் கட்டணமும், மாதத்திற்க்கு 2500 ரூபாயும் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.பெரிய நிறுவனங்களில் உள்ள அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. எல்லாருக்கும் எல்லாமும் கிடைக்க வேண்டும் என்பதால் குறைவான கட்டணம் நிர்ணயத்துள்ளதாக தெரிவித்தார்.