ஜஸ்ட் மிஸ்..! தனியார் கல்லூரி மாணவர்கள் 57 பேரும் உயிர் தப்பினர்..!
நீலகிரிக்கு சுற்றுலா செல்ல நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியைச் சேர்ந்த 52 மாணவர்கள் உள்பட 57 பேர், கடந்த அக்.06- ஆம் தேதி ஊட்டிக்கு வருகைத் தந்தனர். சுற்றுலாத் தலங்களைச் சுற்றிப் பார்த்து விட்டு, மீண்டும் நாமக்கல் மாவட்டத்திற்கு புறப்பட்டனர்.
அப்போது, மேட்டுப்பாளையம், ஊட்டி சாலையில் கல்லாறு அருகே சுற்றுலா பேருந்தின் டயரில் தீப் பிடித்ததாகத் தெரிகிறது. இதனைக் கண்ட பின்னால் வந்த வாகன ஓட்டிகள், பேருந்து ஓட்டுநருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து, அவர் உடனே பேருந்தை நிறுத்தி மாணவ, மாணவிகளை பத்திரமாக இறக்கினார்.
சிறிது நேரத்தில் தீ வேகமாகப் பரவி பேருந்து முழுவதும் எரியத் தொடங்கியது. பேருந்தில் ஏற்பட்ட தீயை தீயணைப்புத் துறையினர் நீண்ட போராட்டத்திற்கு பிறகு கட்டுக்குள் கொண்டு வந்தனர். சரியான நேரத்தில் வாகன ஓட்டிகள் தந்த தகவலால் பேருந்தில் பயணம் செய்த 57 பேரும் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்