#JUST IN : சபாநாயகர் வெளியேறினார்..! பரபரப்பு..!
சபாநாயகர் அப்பாவு பாரபட்சமாக நடந்துகொள்கிறார் என்று அதிமுக தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது. அதிமுகவிலிருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்ட பின்னரும், எதிர்கட்சி துணைத் தலைவர் பதவியில் அவரை தொடர வைக்கிறார் என்றும், உதயகுமாரை எதிர்கட்சித் துணைத் தலைவராக ஏற்று எடப்பாடி பழனிசாமிக்கு அருகில் அமர வைக்கவேண்டும் என்றும் தொடர்ந்து சபாநாயகரிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
நீண்ட இழுபறிக்குப்பின்னரே ஓபிஎஸ் இருக்கை மாற்றப்பட்டது. அதேபோல் அவை நடைபெறும் போது எதிர்கட்சி உறுப்பினர்கள் அமைச்சர்களிடம் கேள்வி எழுப்பும் போது அமைச்சர் அளிக்க வேண்டிய பதிலை முந்திக்கொண்டு சபாநாயகர் அளிக்கிறார் என்றும் அதிமுகவினர் குற்றம் சாட்டுகின்றனர்.
திமுகவுக்கு ஆதரவாக பாரபட்சத்துடன் நடந்துகொள்கிறார் என்றும் அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.
இந்த நிலையில், அப்பாவுவை சபாநாயகர் பதவியில் இருந்து நீக்கக்கோரும் தீர்மானத்தை சட்டமன்ற எதிர்க்கட்சி துணைத்தலைவர் உதயகுமார் ஜனவரி மாதம் கொடுத்துள்ளார். இன்று (மார்ச் 17) அந்த தீர்மானத்தின் மீது விவாதிக்க முடிவு செய்யப்பட்டது.
இந்நிலையில் அப்பாவு மீது அதிமுக கொண்டு வந்த நம்பிக்கை இல்லா தீர்மானம் மீதான விவாதம் தொடங்கியது. இதற்கு ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு 35க்கும் மேற்பட்டோர் ஆதரவு தெரிவித்ததால் விவாதம் தொடங்கியது.
இபிஎஸ் தரப்பு கொண்டு வந்த தீர்மானத்துக்கு ஓபிஎஸ் தரப்பு ஆதரவு தெரிவித்துளளது. வாக்கெடுப்பின் போது சபாநாயகர் அப்பாவு அவையிலிருந்து வெளியேறினார். இதனால் துணை சபாநாயகர் அவையை வழிநடத்துவார்.