#JUST IN : பெரும் சோகம்..! ஜல்லிக்கட்டு காளை மரணம்..!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் அருகே உள்ள பெரிய சூரியூர் கிராமத்தில் ஸ்ரீ நற்கடல் குடி கருப்பணசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு, ஆண்டுதோறும் மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு போட்டி வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான ஜல்லிக்கட்டு போட்டி இன்று (ஜன.15) காலை 8 மணிக்கு தொடங்கியது. திருச்சி மாவட்டத்தின் முதல் ஜல்லிக்கட்டு போட்டி இதுவாகும். இந்த போட்டியில் திருச்சி, தஞ்சை, புதுக்கோட்டை, பெரம்பலூர், உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த 775 ஜல்லிக்கட்டு காளைகளும், 500 மாடுபிடி வீரர்களும் கலந்து கொண்டுள்ளனர்.
இந்நிலையில் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி திருவளர்சோலையை சேர்ந்த அப்பு என்பவரின் காளை காயமடைந்து உயிரிழந்தது. ஜல்லிக்கட்டில் காயமடைந்த காளைக்கு கால்நடை மருத்துவர்கள் உடனடியாக சிகிச்சை அளித்த நிலையில் காளையின் உயிர் பிரிந்தது.
முன்னதாக வாடிவாசலில் இருந்து வெளியே வந்த காளையும், களத்தில் இருந்து வாடிவாசலுக்குள் திடீரென நுழைந்த காளையும் முட்டிக்கொண்டதில் திருவளர்சோலை பகுதியை சேர்ந்த காளை உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் அங்கு சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.