#JUST IN : தமிழகத்தை உலுக்கிய அண்ணா பல்கலை., மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் ஒருவர் கைது..!
சென்னை நகரின் மையப் பகுதியான கிண்டியில் அண்ணா பல்கலைக்கழகம் செயல்பட்டு வருகிறது. இங்கு கன்னியாகுமரியை சேர்ந்த மாணவி ஒருவர் விடுதியில் தங்கி மெக்கானிக்கல் இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.
அவர் அதே கல்லூரியில் மெக்கானிக்கல் மூன்றாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஒருவரை காதலித்து வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் கல்லூரி வளாகத்தில் மறைவான இடத்தில் அந்த மாணவியும் அவரது காதலனும் பேசிக் கொண்டிருந்தனர்.
அப்போது அங்கு வந்த இரண்டு பேர் மாணவனை கடுமையாக தாக்கி விட்டு மாணவியை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும் அதனை வீடியோவாக எடுத்து வைத்ததாகவும் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இதனை தொடர்ந்து பாதிக்கப்பட்ட மாணவி சென்னை கோட்டூர்புரம் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில் வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
புகாரின் அடிப்படையில் காவல் இணை ஆணையர் தலைமையிலான போலீசார் நேற்று மாலை முதல் அண்ணா பல்கலைக்கழகத்திற்குள் சென்று தீவிர விசாரணையில் ஈடுபட்டனர்.
மேலும், பல்கலைக்கழக வளாகத்தில் இருந்த 30-க்கும் மேற்பட்ட சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்த நிலையில், இந்தச் சம்பவம் தொடர்பாக பாலியல் வன்கொடுமை என்ற பிரிவின் கீழ் கோட்டூர்புரம் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குறிப்பாக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்தது அண்ணா பல்கலைக்கழகத்தில் படித்து வரும் மாணவர்களா? விடுதியில் தங்கி படித்து வரும் மாணவர்களா? அல்லது வெளி நபர்களா? அல்லது அங்கேயே தங்கி கட்டட தொழில் செய்து வரும் தொழிலாளிகளா? என்பது குறித்து தீவிர விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட சம்பவத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவ்விவகாரம் தொடர்பாக பாலியல் வன்கொடுமை, பாலியல் துன்புறுத்தல் ஆகிய பிரிவுகளின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறது. இச்சம்பவத்தை கண்டித்து பல்கலை. மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.