#JUST IN : இனி வங்கி கணக்குகளுக்கு நாமினி கட்டாயம்..!

பிக்சட் டெபாசிட், சேவிங் அக்கவுண்ட்கள், நடப்பு கணக்கு என பல்வேறு வகையான வங்கி கணக்குகளும் உள்ளன. வாடிக்கையாளர்கள் தங்களின் வரவு செலவுக்கு ஏற்றப்படி சேவிங்ஸ் அக்கவுண்ட் அல்லது நடப்பு கணக்கு உள்ளிட்டவற்றை வாடிக்கையாளர்கள் வைத்துள்ளனர். கிட்டத்தட்ட 90 சதவீதம் பேரிடம் தற்போது வங்கி கணக்குகள் இருப்பதாக தரவுகள் கூறுகின்றன.
இந்த நிலையில்தான் தற்போது வங்கிகளுக்கு முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளதாவது:-
பெரும்பாலான வங்கி கணக்குகளில் நாமினிக்கள் எனப்படும் வாரிசுதாரர் சேர்க்கப்படவில்லை. இதன் காரணமாக வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்கள் இறந்து விட்டால், அந்த கணக்கில் உள்ள பணத்தை அவரது குடும்பத்தினர் பெறுவதில் கடும் சிரமத்தை சந்திக்க நேரிடுகிறது. இதற்கு வங்கி வாடிக்கையாளர் தனது அக்கவுண்ட்டில் உள்ள பணம், தனக்குப்பின் யாருக்கு கிடைக்க வேண்டும் என்பதை குறிக்கும் வாரிசுதாரரை நியமனம் செய்யாமல் இருப்பதே முக்கிய காரணமாக உள்ளது.
எனவே, அனைத்து வகை வங்கி கணக்குகள் அதாவது சேமிப்பு கணக்கு, பிக்சட் டெபாசிட், லாக்கர் வசதி வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் என அனைத்து வகையான வங்கி கணக்குகளுக்கும் நாமினிக்கள் விவரங்களை பெற வேண்டும். புதிதாக வங்கி கணக்குகள் தொடங்குபவர்களுக்கு மட்டும் இன்றி ஏற்கனவே வங்கி கணக்கு வைத்து இருப்பவர்களுக்கும் இது பொருந்தும். வங்கி கணக்குகளில் வாரிசுதாரர்கள் இல்லாத காரணத்தால் பணத்தை சுமூகமாக பெறுவதில் உள்ள சிக்கல்களை தவிர்க்க அனைத்து வங்கி கணக்குகளுக்கும் லாக்கர் வசதிகளுக்கும் வாரிசுதாரரை சேர்க்க வேண்டும்" எனக் கூறப்பட்டுள்ளது.
என்.பி.எப்.சி எனப்படும் வங்கி சாராத நிதி நிறுவனங்கள், கூட்டுறவு வங்கிகள் என அனைத்து வகையான வங்கிகளுக்கும் இது பொருந்தும் என்றும் தனது அறிவுறுத்தலில் ரிசர்வ் வங்கி கூறியுள்ளது. அதுமட்டும் இன்றி, வங்கி கணக்கு தொடங்கும்போது வாடிக்கையாளர்கள் வாரிசுதாரரை சேர்க்கும் வகையில் ஊழியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். ரிசர்வ் வங்கி, ஏற்கனவே உள்ள விண்ணப்பங்களில் அது குறித்த பிரிவு இல்லை என்றால் புதிதாக சேர்க்க வேண்டும் எனவும், வங்கி ஊழியர்களுக்கு இது தொடர்பாக உரிய பயிற்சி அளிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.