#JUST IN : கோவையில் பிரதமரின் ரோடு ஷோவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதி..!

வரும் மார்ச் 18-ம் தேதி கோவைக்கு பிரதமர் நரேந்திர மோடி வருகிறார். கோவையில் மூன்றரை கிலோ மீட்டர் தூரத்துக்கு ‘ரோடு ஷோ’ நிகழ்வில் பங்கேற்று பொதுமக்களை சந்தித்து வாக்கு சேகரிக்கிறார்.
இது தொடர்பாக பிரதமரின் சிறப்பு பாதுகாப்பு குழுவினர் இன்று கோவை மாநகர காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் தலைமையிலான அதிகாரிகளுடன் கோவை மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டனர். இதில் மாவட்ட ஆட்சியர் கிராந்தி குமார் பாடி, பாஜக நிர்வாகிகள் உள்ளிட்டோரும் பங்கேற்றனர். அப்போது, கோவை மாநகரில் இது போன்ற நீண்டதூர பேரணிக்கு இதுவரை அனுமதி அளிக்கப்பட்டது இல்லை என காவல்துறை தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மேலும் சமீபத்தில் குண்டு வெடிப்பு நிகழ்ந்த ஊர் என்பதாலும், என்.ஐ.ஏ., கண்காணிப்பில் இருக்கும் ஊர் என்பதாலும் சிக்கல் இருப்பதாக காவல்துறையினர் கூறியதாக தெரிகிறது. மேலும் பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து சாலை பேரணிக்கு அனுமதி வழங்க முடியாது என போலீஸார் பிரதமர் பாதுகாப்பு படையினரிடம் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், கோவையில் நடைபெறும் பிரதமர் மோடியின் வாகனப் பேரணிக்கு அனுமதி வழங்க வலியுறுத்தி கோவை பாஜக நிர்வாகி ரமேஷ் குமார் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு இன்று(மார்ச். 15) தொடுத்தார்.
இந்த வழக்கை, அவசர வழக்காக இன்றே எடுத்து விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி வெங்கடேஷ், மார்ச் 18-ல் கோவையில் நடைபெறும் பிரதமரின் வாகனப் பேரணிக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார்.