#JUST IN : ஹிந்து மக்கள் கட்சி போராட்டத்திற்கு ஐகோர்ட் அனுமதி..!
பிராமண சமூகத்தினரை பாதுகாக்க சட்டம் இயற்ற, மதுரையில் ஜன., 5ல் நடைபெறும் உண்ணாவிரதத்திற்கு அனுமதி கோரி, ஹிந்து மக்கள் கட்சி மதுரை மாவட்ட தலைவர் சோலை கண்ணன் ஐகோர்ட் மதுரைக்கிளையில் மனுத்தாக்கல் செய்தார். அந்த மனுவில், தமிழக ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகளை சேர்ந்த சிலரின் செயல்கள், பேச்சுக்கள் பிராமண சமூகத்திற்கு எதிராக உள்ளன.
எனவே, பிராமண சமூகத்தினரை பாதுகாக்க சட்டம் இயற்ற மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி ஜன., 5ல் மதுரை பழங்காநத்தம் ரவுண்டானா அருகே காலை 9:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை உண்ணாவிரதம் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்' என குறிப்பிடப்பட்டு இருந்தது.
மனுவை விசாரித்த நீதிபதி, 'மதுரை உண்ணாவிரதத்தில் யார், யார் பேசுகின்றனர், எத்தனை பேர் பங்கேற்கின்றனர் என்ற விபரத்தையும், சட்டத்திற்கு உட்பட்டு சுமுகமாக நடத்தப்படும் என்பதற்கான உத்தரவாதத்தையும் மனுதாரர் தரப்பில் தாக்கல் செய்ய வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த மனு இன்று (ஜன.,04) மீண்டும் ஐகோர்ட் மதுரைக்கிளை விசாரணைக்கு வந்தது. முடிவில், இந்து மக்கள் கட்சி உண்ணாவிரதப் போராட்டத்திற்கு அனுமதி அளித்தும், உரிய பாதுகாப்பு வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.