#JUST IN : முன்னாள் முதல்வரின் உடல் அடையாளம் தெரிந்தது..!

பிரிட்டன் தலைநகர் லண்டனுக்கு, 230 பயணியர் உட்பட 242 பேருடன் புறப்பட்ட, 'ஏர் இந்தியா' போயிங் 787 -8 டிரீம் லைனர் விமானம், 30 வினாடிகளில் கீழே விழுந்து வெடித்தது.
600 - 800 அடி உயரமே பறந்த விமானம், மருத்துவக் கல்லுாரி விடுதி மீது பயங்கரமாக மோதி விபத்துக்கு உள்ளானதில், குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உட்பட 241 பேர் உயிரிழந்தனர். பயணித்த ஒருவர் மட்டுமே உயிர் பிழைத்தார். இந்த விபத்தில் மொத்தம் 270க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.தற்போது, உயிரிழந்தவர்களின் உடலை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது.
விமான விபத்தில் உயிரிழந்த குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டதாக, மாநில உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி தெரிவித்தார்.
இது குறித்து குஜராத் உள்துறை அமைச்சர் ஹர்ஷ் சங்வி கூறியதாவது: ஜூன் 12ம் தேதி ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். இன்று காலை 11.10 மணி அளவில் டி.என்.ஏ., பரிசோதனை மூலம் அவரது உடல் அடையாளம் காணப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.
இது குறித்து குஜராத் சுகாதார அமைச்சர் ருஷிகேஷ் படேல் நிருபர்களிடம் கூறியதாவது: முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் அடையாளம் காணப்பட்டுள்ளது.
ராஜ்கோட்டில் இறுதிச் சடங்குகளை மேற்கொள்ள மாநில அரசு அனைத்து உதவிகளையும் செய்யும்.
அவரது உடலை எப்போது மருத்துவமனையில் இருந்து எடுத்துச் சென்று இறுதி சடங்கு செய்வது என்பதை குடும்பத்தினர் முடிவு செய்வார்கள். இவ்வாறு அவர் கூறினார்.