1. Home
  2. தமிழ்நாடு

#JUST IN : இயக்குனர் ஷங்கர் வழக்கில் திடீர் திருப்பம்..!சொத்து முடக்கத்துக்கு இடைக்கால தடை..!

Q

ஆரூர் தமிழ்நாடன் என்பவர் எழுதிய ‘ஜுகிபா’ கதை, ‘திக்திக் தீபிகா’ என்ற பெயரில் கடந்த 2007-ம் ஆண்டு நாவலாக வெளியானது. இந்நிலையில் 2010-ம் ஆண்டு இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘எந்திரன்’ படம் வெளியானது. அதைப் பார்த்த எழுத்தாளர் ஆரூர் தமிழ்நாடன், ‘எந்திரன்’ திரைப்படத்தின் கதை தன்னுடைய ‘ஜுகிபா’ கதை எனக்கூறி, ‘எந்திரன்’ படத்தின் தயாரிப்பாளர் கலாநிதி மாறன், இயக்குநர் ஷங்கர் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்பினார்.

தொடர்ந்து, தனது கதையைத் திருடி ‘எந்திரன்’ படத்தை எடுத்துவிட்டு கோடிக்கணக்கில் சம்பாதிப்பதாகவும், இது காப்புரிமை சட்டத்தின்படி கிரிமினல் குற்றம் எனவும் கூறி எழும்பூர் கீழமை நீதிமன்றத்தில் ஆரூர் தமிழ்நாடன் வழக்குத் தொடர்ந்தார். நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் அடிப்படையில், அமலாக்கத் துறையும் தனியாக வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தியது. இந்நிலையில், ‘எந்திரன்’ திரைப்பட கதை விவகாரத்தில் இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி மதிப்பிலான 3 அசையா சொத்துகளை அமலாக்கத் துறை முடக்கி நடவடிக்கை எடுத்துள்ளது

அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக இயக்குனர் ஷங்கர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த மனு நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ், என்.செந்தில்குமார் அமர்வில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, ஷங்கர் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், எந்திரன் படத்தின் கதை விவகாரத்தில் ஷங்கர் காப்புரிமை சட்டத்தை மீறவில்லை ஆரூர் தமிழ்நாடன் தாக்கல் செய்த மனுவில் சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி தீர்ப்பளித்துள்ள நிலையில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறினார்.

எந்திரன் திரைப்படத்தின் கதைக்காக மட்டும் 11.5 கோடி ரூபாய் ஊதியத்தை ஷங்கர் பெற்வில்லை எனவும் மற்ற பணிகளுக்காகவும் பெற்றுள்ள நிலையில் சொத்துக்களை அமலாக்கத்துறை எப்படி முடக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.

தனி நபர் அளித்த புகாரின் அடிப்படையில் குற்றம் நடந்துள்ளதாக கூறி வழக்குப்பதிவு செய்ய முடியுமா? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும், தனி நீதிபதி ஷங்கருக்கு ஆதரவாக தீர்ப்பளித்துள்ள நிலையில் புகாரின் இறுதி முடிவுக்காக காத்திருக்காமல் நடவடிக்கை எடுத்தது ஏன் எனவும் நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

இதற்கு பதிலளித்த அமலாக்கத்துறை வழக்கறிஞர் என்.சிபி விஷ்னு தனி நபர் புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்யலாம் எனக்கூறினார். மேலும், அமலாக்கத்துறை நடவடிக்கை மூலம் இயக்குனர் ஷங்கருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை எனவும் இந்த வழக்கை அமலாக்கத்துறையிடம் அவர் எதிர்கொள்ளலாம் எனவும் தெரிவித்தார்.

இதனையடுத்து, இயக்குனர் ஷங்கரின் சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு இடைக்கால தடை விதித்த நீதிபதிகள் மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஏப்ரல் 21ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

Trending News

Latest News

You May Like