#JUST IN : டெல்லி IAS பயிற்சி மையத்தில் உயிரிழந்த 3 மாணவர்கள் வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்..!
மேற்கு டெல்லி பகுதியில் ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட குடிமைப்பணிகளுக்கான பயிற்சிமையங்கள் ஏராளமாக செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில்,ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையம் பழைய ராஜேந்திரா நகர் பகுதியில் உள்ளது. இங்கு, கேரளா,உத்தர பிரதேசம், தெலங்கானா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் குடிமைப் பணி தேர்வுகளுக்கு பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த நிலையில், டெல்லியில் பெய்த கனமழை காரணமாக ராவ் பயிற்சி மையத்தின் தரைதளத்துக்குள் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. அங்குதான் பயிற்சி மையத்தின் நூலகம் செயல்பட்டு வந்துள்ளது. இதனால், ஏராளமானவர்கள் வெள்ளத்தில் சிக்கிக் கொண்டனர். இதில், 2 மாணவிகள், ஒரு மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தனர்.
ராவ் பயிற்சி மையத்தின் தரைதளத்தை சேமிப்பகம் அல்லது வாகன நிறுத்தப் பகுதியாக மட்டுமே பயன்படுத்த டெல்லி மாநகராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கிய நிலையில் விதிகளை மீறி நூலகம் அமைத்திருந்ததாக பயிற்சி மையம் மீது புகார் எழுந்துள்ளது.
இச்சம்பவம் குறித்து தீயணைப்பு படை அதிகாரிகள் கூறியதாவது: ராவ் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் தரைதள பகுதியில் மாணவர்கள் வெள்ளத்தில் சிக்கிக்கொண்டிருப்பதாக 27-ம் தேதி இரவு 7.19 மணி அளவில் தகவல்கிடைத்தது. இதையடுத்து, 5 தீயணைப்பு வாகனங்கள் அனுப்பி வைக்கப்பட்டன. உதவிக்கு தேசியபேரிடர் மீட்பு குழுவும் வரவழைக்கப்பட்டது.
மீட்பு பணி தொடங்கிய சில மணி நேரங்களில் 2 மாணவிகளின் உடல்கள் மீட்கப்பட்டன. நள்ளிரவுஒரு மாணவரின் உடல் மீட்கப்பட்டது. மீட்பு பணி 7 மணி நேரம் நீடித்தது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
ஐஏஎஸ் பயிற்சி மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து, அவர்களது மரணத்துக்கு நீதி கேட்டுடெல்லி முழுவதும் மாணவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்தது. டெல்லி மேயரின் வீட்டை முற்றுகையிட்டு பல்வேறு மாணவ அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், மாணவர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்ததாக, ராவ் பயிற்சி மையத்தின் உரிமையாளர் அபிஷேக் குப்தா, ஒருங்கிணைப்பாளர் தேஷ்பால் சிங் ஆகியோரை போலீஸார் கைது செய்தனர். அவர்கள் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் டெல்லியில் 3 மாணவர்கள் உயிரிழந்த வழக்கு விசாரணையை சிபிஐ-க்கு மாற்றி டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
வெள்ளநீர் தடுப்பு, மழைநீர் வடிகால் பணியில் அரசு ஊழியர்கள் முறைகேடு செய்திருக்கலாம்.ஊழல் நடந்திருக்கலாம் என்ற சந்தேகத்தால் சிபிஐ விசாரணைக்கு மாற்றுவதாக டெல்லி உயர் நீதிமன்றம் கூறியுள்ளது