#JUST IN : பெங்களூருவில் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் பலி எண்ணிக்கை 5 ஆக உயர்வு..!
கர்நாடகத்தில் தென்மேற்கு பருவமழை காலம் நிறைவடைந்து விட்டது. தற்போது வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ளது. இந்த முறை தொடக்கத்திலேயே மழை வெளுத்து வாங்கி வருகிறது. தலைநகர் பெங்களூருவில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது.
இந்தநிலையில், ஹென்னூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டுக் கொண்டிருந்த அடுக்குமாடி கட்டிடம் ஒன்று கனமழை காரணமாக நேற்று (அக்.22) மாலை இடிந்து விழுந்தது. இதில் அக்கட்டிடத்தில் பணிபுரிந்த 20 தொழிலாளர்கள் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.
10 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். அவர்களில் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். மேலும், 5 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். எஞ்சியோரை மீட்கும் பணி நடந்து வருகிறது.
தகவல் குறித்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். பெங்களூருவில் பலத்த மழை பெய்து வரும் நேரத்தில் இந்த சம்பவம் நடந்ததாக தீயணைப்பு துறை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அஸ்திவாரம் பலவீனமாக இருந்ததே இந்த விபத்துக்கு காரணம் என்று விசாரணையில் தெரியவந்ததாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
ஏழு அடுக்குகளைக் கொண்ட அந்த கட்டிடம் சரியும் சிசிடிவி காணொலி காட்சி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. அந்த பகுதியில் 4 மாடிக் கட்டிடங்களுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ள நிலையில், சட்டவிரோதமாக அந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.