#JUST IN : பூஜை நடத்தக்கூடாது: நீதிமன்றம் உத்தரவு!

இந்து முன்னணி சார்பில் மதுரையில் வரும் 22ம் தேதி முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.
இந்நிலையில், மதுரையைச் சேர்ந்த முத்துக்குமார், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், 'ஜூன் 22 ஆம் தேதி மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறவுள்ளது. மாநாடு நடைபெறும் அம்மா திடலில், 5 லட்சம் பேர் இணைந்து ஒரே நேரத்தில் கந்த சஷ்டி பாடலையும், திருப்புகழையும் பாட உள்ளனர். எவ்வித அரசியல் நோக்கமும் இல்லாமல் முருக பக்தர்கள் மாநாடு நடத்தப்படுகிறது. ஆன்மிக கருத்துக்களை கலை நிகழ்ச்சிகள் வாயிலாகவும், சொற்பொழிவுகள் வாயிலாகவும் மாநாட்டில் வழங்கவுள்ளோம்.
இந்நிலையில் முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை ஜூன் மாதம் 10ஆம் தேதி மாநாடு நடைபெற உள்ள திடலில் வைத்து பூஜை செய்ய அனுமதி கோரி விண்ணப்பித்தோம். ஆனால், மதுரை மாநகர காவல் உதவி ஆணையர் மைக்செட் வைக்கவும் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து தொடர்ச்சியாக வழிபடவும் அனுமதி வழங்க மறுத்துவிட்டார். ஆகவே முருக பக்தர்கள் மாநாடு நடைபெற உள்ள அம்மா திடலில் ஜூன் 10ஆம் தேதி முருகனின் அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து 22ஆம் தேதி வரை காலை, மாலை வழிபாடு செய்து, பிரசாதம் வழங்க அனுமதி வழங்கி உத்தரவிட வேண்டும்' என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதி புகழேந்தி, 'அறுபடை மாதிரிகளை வைத்து வழிபட ஆகம விதிகள் உள்ளதா? என கேள்வி எழுப்பினார். அதற்கு ஆகம விதிகளின் படியே அறுபடை வீடுகளின் மாதிரிகளை வைத்து வழிபட முடிவு செய்யப்பட்டுள்ளது. காலையும், மாலையும் 2 மணி நேரம் பூஜை நடத்தி, பிரசாதம் மட்டுமே வழங்கப்படும்' என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அரசுத்தரப்பில், '11.5.25ல் மனு பெற்றக் பின், கேட்கப்பட்டக் கேள்வியில் நிகழ்ச்சி நிரல் குறித்து கேட்டதற்கு, 5 லட்சம் நபர்கள் இணைந்து கந்தசஸ்டி பாட உள்ளதாக தெரிவித்துள்ளனர். கலந்து கொள்பவர்களின் விபரங்கள் ஒரு பக்கம் 20 ஆயிரம் எனவும், மறு பக்கம் 5 லட்சம் எனவும் மாறுபட்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
கலந்து கொள்ளும் முக்கிய நபர்கள் குறித்த விபரங்கள் கேட்டால் தெரியவில்லை என பதிலளிக்கிறார்கள். பெங்களூரு கூட்ட நெரிசல் அசம்பாவிதம் போல் நிகழ்ந்து விடக்கூடாது. 'என தெரிவிக்கப்பட்டது. அதற்கு நீதிபதிகள், 'முருக பக்தர் மாநாடு நடத்துவதற்காக அனுமதி கோரிய பிரதான மனு குறித்த விபரங்களை வழங்குங்கள். மேலும், நீங்கள் நடத்தும் நிகழ்வில் எவ்வளவு பேர் கலந்து கொள்ள உள்ளனர் என்பது குறித்த விபரங்களை வழங்கினால் தான் காவல்துறை உரிய பாதுகாப்பை வழங்க இயலும் என குறிப்பிட்டு, 'மாநாட்டுக்கு அனுமதி கோரிய பிரதான மனு தொடர்பான காவல்துறையினரின் கேள்விகளுக்கு சரியான விளக்கத்தை வழங்க மனுதாரருக்கும், அதனடிப்படையில் 2 நாட்களில் காவல்துறை முடிவெடுத்து, நீதிமன்றத்தில் தெரிவிக்கவும் உத்தரவிட்டு, வழக்கை ஜூன் 13ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், அறுபடை வீடுகளின் மாதிரி அமைப்பதற்கான பணிகளைச் செய்யலாம். ஆனால் பூஜை செய்யக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.