#JUST IN : பிரபல யூடியூபர் டிடிஎஃப் வாசனுக்கு நீதிமன்ற காவல் நீட்டிப்பு!
காஞ்சிபுரம் மாவட்டம், பாலுசெட்டிசத்திரம் அருகே உள்ள கிராம சாலையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் பைக் சாகசத்தில் ஈடுபட்டிருந்த போது, எதிர்பாராத விதமாக இருசக்கர வாகனம் நிலைத்தடுமாறி கீழே, விழுந்ததில் அவர் படுகாயமடைந்தார். இது குறித்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலான நிலையில், போக்குவரத்து விதிகளை மீறியது உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவுச் செய்த பாலுசெட்டிசத்திரம் காவல்துறையினர், அவரை கைது செய்தனர்.
அதைத் தொடர்ந்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட டிடிஎஃப் வாசனுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவலில் சிறையில் அடைக்க உத்தரவிட்டிருந்தது. தற்போது சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் டிடிஎஃப் வாசனின் நீதிமன்ற காவல் இன்றுடன் நிறைவடைய உள்ள நிலையில், காணொளி மூலம் காஞ்சிபுரம் இரண்டாவது நடுவர் நீதிமன்ற நீதிபதி இனியா கருணாகரன் முன்பு ஆஜர்படுத்தப்பட்டார்.
அப்போது அவருக்கு வரும் அக்டோபர் 16- ஆம் தேதி வரை நீதிமன்றக் காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார். ஜாமீன் கோரிய மனுக்களை ஏற்கனவே இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், இன்று தாக்கல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.