#JUST IN : அண்ணாமலை மற்றும் பாரதிதாசன் பல்கலைக்கழக தேர்வுகள் ஒத்திவைப்பு..!!
வங்கக் கடலில் உருவான ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் வலுவடைந்து தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி படிப்படியாக நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக டெல்டா மாவட்டங்களில் அதிகனமழைக்கான ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பேரிடர் மீட்புக் குழுக்கள் டெல்டாவில் முகாமிட்டுள்ளன. மீட்பு மற்றும் நிவாரண பணிகளுக்கு தேவையான வசதிகளும் செய்யப்பட்டுள்ளன.
கனமழை காரணமாக கடலூர், மயிலாடுதுறை பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை (நவம்பர் 27) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிக்கு நாளை விடுமுறை அறிவித்து அம்மாநில அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்த நிலையில் கனமழை காரணமாக சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை நடைபெற இருந்த பல்கலைக்கழகத் தேர்வுகளும் தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதேபோல கனமழை காரணமாக திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தில் நாளை நடைபெறுவதாக இருந்த இளநிலை, முதுநிலை பருவ எழுத்து தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன. ஒத்திவைக்கப்பட்ட தேர்வுக்குரிய மறு தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் பல்கலைக் கழக நிர்வாகம் அறிவித்துள்ளது.
மேலும், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நாளை நடைபெறவிருந்த கூட்டுறவு சங்க விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பணிக்கான நேர்முகத் தேர்வு, கனமழை காரணமாக டிசம்பர் 4ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.