#JUST IN : அஜித்தை போலீசார் தாக்கும் பகீர் காட்சி..!

மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவிலில் காவலாளியாக பணியாற்றியவர் அஜித்குமார் (வயது 28). தங்க நகை திருட்டு வழக்கு தொடர்பாக போலீஸ் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.
இது தொடர்பாக தனிப்படை போலீசார் 6 பேர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த சூழலில் மடப்புரம் இளைஞர் மரண வழக்கில் கைதான 5 போலீசாரையும் 15 நாள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் பிரசாத் உத்தரவு பிறப்பித்திருந்தார். இதன்படி பிரபு, ஆனந்த், கண்ணன், ராஜா, சங்கரமணிகண்டன் ஆகியோர் மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் திருப்புவனம் இளைஞர் லாக்-அப் மரணம் தொடர்பான வழக்கு விசாரணை மதுரை அமர்வில் இன்று நடைபெற்று வரும் நிலையில் அஜித்தை போலீசார் விசாரணை என்ற பெயரில் தாக்கும் காட்சி வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
போலீசாரிடம் இருந்து தப்பிக்க முயன்றபோது கீழே விழுந்து வலிப்பு ஏற்பட்டு அஜித் குமார் உயிரிழந்ததாக எப்.ஐ.ஆரில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில், அஜித் குமாரை போலீசார் பிரம்மால் தாக்கும் வீடியோ வெளியாகி உள்ளது.