1. Home
  2. தமிழ்நாடு

இதை மட்டும் செய்யுங்க..! அண்ணாமலையுடன் நேருக்கு நேர் விவாதிக்க தயார்: மா.சுப்பிரமணியன்!

1

திருநெல்வேலியில் உதவியாளர் ஊசி போட்டதில் நான்கு வயது சிறுவன் உயிரிழந்த விவகாரம் குறித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியிருந்தார். அவர் கூறுகையில், திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மருத்துவர் இல்லாத நிலையில், அங்கிருந்த உதவியாளர் ஒருவர் ஊசி போட்டதால், தென்காசியைச் சேர்ந்த நான்கு வயது சிறுவன் ஒருவன் உயிரிழந்திருக்கும் செய்தி, மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. திமுக ஆட்சிக்கு வந்த பிறகு, கடந்த நான்கு ஆண்டுகளில், தமிழக அரசு மருத்துவமனைகளில் ஏற்படும் உயிரிழப்புகள் எண்ணிலடங்காமல் அதிகரித்துள்ளன. இவற்றில் பெரும்பாலானவை, போதிய மருத்துவர்கள் இல்லாததால் ஏற்பட்டுள்ளன. நான்கு ஆண்டுகளாக, மருத்துவர்களை நியமிக்காமல் என்ன செய்து கொண்டிருக்கிறார் சுகாதாரத்துறை அமைச்சர்? என்று கேள்வி எழுப்பியிருந்தார்.

இதுகுறித்து, சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் கூறியதாவது:-

என்னுடைய சமூக வலைதளத்தில் தினந்தோறும் ஏழு முதல் எட்டு பதிவுகள் வரை போடப்படுகின்றன. காலை முதல் மாலை வரை என்னுடைய ஒவ்வொரு மணி நேர பணியும் சமூக வலைதளத்தில் பதிவிடப்படுகிறது. அநேகமாக அண்ணாமலை தன்னுடைய சமூக வலைதளத்தில் இல்லை என்று கருதுகிறேன். எனது சமூக வலைதளத்தை அவர் பின்தொடர்வாரானால் நிச்சயம் இந்த துறைக்கும், மக்களுக்கும் சுகாதாரத் துறை சார்பில் நான் ஆற்றும் பணியை அறிந்துகொள்ள முடியும். அவருக்கு இதற்குமேல் நான் பதில் சொல்ல விரும்பவில்லை. பொருந்தாத காரணங்களை தொடர்ந்து சொல்வது அண்ணாமலைக்கு வாடிக்கையான ஒன்று.

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் கூட நல்ல மனிதர் கஞ்சா கருப்பு. அவருக்கு கூட இவர்களால் நல்லது செய்ய முடியவில்லை என்றார். அதே கஞ்சா கருப்புதான் நேற்றைக்கு ஒரு பொது நிகழ்ச்சியில், என்னிடம் வருத்தம் தெரிவித்தார். தவறுதலாக சொன்ன விஷயத்துக்கு வருந்துகிறேன். இந்த அரசு மிகச்சிறப்பாக பல விஷயங்களை கையாண்டிருக்கிறது என்னை மன்னிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார். இதற்கு அண்ணாமலை என்ன சொல்லப் போகிறார் என்று தெரியவில்லை. வேண்டும் என்றால் கஞ்சா கருப்பை அழைத்து நீ ஏன் இந்த மாதிரி அங்கு சென்று பேசினாய் என்று அவரையே கூட கேட்கலாம்.

தினந்தோறும் ஏதாவது ஒன்றை சொல்ல வேண்டும் என்பது அவரது விருப்பமாக உள்ளது. அதில் நான் தலையிட விரும்பவில்லை. அரசு மருத்துவமனைகளில் மரணங்கள் எண்ணிக்கை அதிகரிக்கிறது என்று கூறுகிறார். அரசு மருத்துவ சேவை என்பது உயர்ந்திருக்கிற காரணத்தினால் தான் இரண்டு மடங்கு, மூன்று மடங்கு எண்ணிக்கையில் பொதுமக்கள் மருத்துவ சேவைக்காக வருகின்றனர். அரசு மருத்துவமனைகள் என்றால் தமிழக அரசின் மருத்துவமனையை மட்டுமே சொல்வது பொருத்தமாகாது. ஒன்றிய அரசு நடத்துகின்ற மருத்துவமனைகளில் இறப்பில்லாத நிலை இருக்கிறதா. எல்லோரையும் மார்க்கண்டேயர்களாக வாழ வைக்கிறார்களா. அரசு மருத்துவமனைக்கு பெரும்பாலானோர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெயிலியரான பின்னர் அரசு மருத்துவமனைக்கு வருகிறார்கள். அங்கே ஒன்றிரண்டு சிகிச்சை பலனில்லாமல் இறப்பது என்பது இயற்கை நியதி. ஆனால், அரசு மருத்துவமனைகளில் இறப்புகள் அதிகமாக இருக்கிறது என்ற பொத்தாம் பொதுவான குற்றச்சாட்டை ஏற்கவே முடியாது. அவருக்கு நேரடியாகவே நான் பதில் சொல்ல கடமைப்பட்டிருக்கிறேன்.

எந்த மருத்துவமனையில் மருத்துவர்களின் அலட்சியத்தால், பற்றாக்குறையால் இறப்பு ஏற்பட்டது என்பது குறித்து புள்ளி விவரங்களோடு அவர் தெரிவித்தால் அவருடன் நான் நேருக்கு நேர் வாதிட தயாராக இருக்கிறேன். தேவையற்ற வகையில் அரசு நிர்வாகத்தை குறை கூறி யாருக்கோ லாபத்தை ஏற்படுத்துகிற முயற்சியில் அவர் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன். அரசு மருத்துவச் சேவை இன்று மிகப்பெரிய அளவில் வளர்ந்து மக்கள் மத்தியில் வரவேற்பு உள்ளது. அதன் தரத்தை மக்களிடையே குறைத்து மதிப்பிடும் வகையில் வெளியிடப்படும் அறிக்கைகள் பெரிய அளவில் அரசு மருத்துவ நிர்வாகத்தை பாதிக்கும் என்பதை உணராமல் அவர் எப்படிச் சொல்கிறார் என்று புரியவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Trending News

Latest News

You May Like