இளநிலை மருத்துவர்கள் 2-வது நாளாக போராட்டம்..!
கொல்கத்தாவில் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள ஓர் அறையில் கடந்த மாதம் 9-ஆம் தேதி, 31 வயது பெண் பயிற்சி மருத்துவர் ஒருவர் பாலியல் வன்கொடுமைக்குள்ளாக்கப்பட்டு கொல்லப்பட்டதற்கு நீதிகோரி மருத்துவர்கள் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். நாடெங்கிலும் நடைபெற்ற மருத்துவர்கள் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டுள்ள நிலையில், கொல்கத்தாவில் இளநிலை மருத்துவர்களின் போராட்டம் தொடருகிறது. லால்பஸார் பகுதியில் இளநிலை மருத்துவர்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
லால் பஜார் பகுதியில் அமைந்துள்ள காவல்துறை தலைமையகத்தை நோக்கி திங்கள்கிழமை(செப். 2) பகல் 2 மணிக்கு பேரணியாகச் சென்ற மருத்துவர்கள் காவல்துறை ஆணையர் வினீத் கோயல் ராஜிநாமா செய்ய வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து போராட்டக்காரர்கள் தொடர்ந்து முன்னேற காவல்துறை அனுமதி மறுத்ததைத் தொடர்ந்து, அவர்கள் அனைவரும் திங்கள்கிழமை(செப். 2) இரவு முழுவதும் லால் பஜார் பகுதியில் வீதிகளில் உட்கார்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 2-வது நாளாக நேற்றும் (செவ்வாய்க்கிழமை) அவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மருத்துவர்களுக்கு ஆதரவாக உள்ளூர் மக்களும் போராட்டத்தில் பங்கேற்றதால் ஏராளமான காவலர்கள் அப்பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
பெண் மருத்துவர் கொலை வழக்கை சிபிஐ விசாரித்து வரும் நிலையில், சம்பவம் நிகழ்ந்த ஆர். ஜி. கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நிதி முறைகேடுகள் நிகழ்ந்ததாக முன்னாள் முதல்வர் சந்தீப் கோஷ் உள்பட நால்வரை அதிகாரிகள் திங்கள்கிழமை(செப். 2) கைது செய்தனர். சந்தீப் கோஷின் பாதுகாவலர் அஃப்சர் அலி, மருத்துவமனை ஊழியர்கள் பிப்லாவ் சின்கா, சுமன் ஹஸாரா ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், அவர்களிடம் விசாரணை தொடருகிறது.