1. Home
  2. தமிழ்நாடு

இனி ஜூன் 25-ம் தேதி அரசியல் சாசனம் படுகொலை தினமாக அனுசரிக்கப்படும்..!

1

சுதந்திர இந்தியா வரலாற்றில் எமெர்ஜென்சி என்பது ஒரு கருப்பு நாள் என இன்று வரை எதிர்க்கட்சிகளால் விமர்சிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த தினத்தை அரசியல் சாசன படுகொலை தினமாக மத்திய அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி இனி வரும் ஆண்டுகளில் ஜூன் மாதம் 25ம் தேதி அரசியல் சாசன படுகொலை தினமாக அனுசரிக்கப்படும் என மத்திய அரசு அரசாணை வெளியிட்டிருக்கிறது.

இதனை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தனது x தளத்தில் பகிர்ந்திருக்கிறார்.

“1975ம் ஆண்டு ஜூன் 25-ந்தேதி அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி ஒரு சர்வாதிகார மனநிலையில் தேசத்தின் மீது அவசர நிலையை விதித்து, நமது ஜனநாயகத்தின் ஆன்மாவின் கழுத்தை நெரித்தார். மற்றும் ஊடகங்களின் குரல் அடக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 25-ம் தேதியை சம்விதான் ஹத்யா திவாஸ் (அரசியல் சாசன படுகொலை தினம்) என்று அனுசரிக்க இந்திய அரசு முடிவு செய்துள்ளது. இந்த நாள் 1975 அவசரநிலையின் மனிதாபிமானமற்ற வலிகளைத் தாங்கிய அனைவரின் மகத்தான பங்களிப்பை நினைவுகூரும்” என்று அமித்ஷா x தளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

கடந்த இரண்டு லோக்சபா தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சியமைத்த நிலையில், சமீபத்தில் நடந்த முடிந்த லோக்சபா தேர்தலில் பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்த தேர்தலில் மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 400ஐ கைப்பற்றுவோம் என்று பாஜக கூறியிருந்தது. ஆனால், 400 தொகுதிகளில் வென்றுவிட்டால் மூன்றில் 2 பங்கு பெரும்பான்மை பாஜகவுக்கு கிடைத்துவிடும் என்று காங்கிரஸ் எச்சரித்திருந்தது.

மட்டுமல்லாது, இந்த மெஜாரிட்டி மூலம் அரசியல் சாசனத்தை மாற்றி, இடஒதுக்கீட்டை முழுமையாக பாஜக ரத்து செய்துவிடும் என்றும் காங்கிரஸ் எச்சரித்திருந்தது. இந்த பிரசாரம் எதிர்பார்த்தபடி பாஜகவின் வாக்கு வங்கியை அப்படியே முடக்கியது. இப்படியாக இந்த தேர்தலில் பாஜக தனிப்பெரும்ப பெரும்பான்மை பெறவில்லை. இப்படி இருக்கையில் காங்கிரஸை பழி வாங்கும் நோக்கத்தில் தற்போது அரசியல் சாசன படுகொலை தினத்தை பாஜக அறிவித்திருக்கிறது என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

முன்னதாக லோக்சபா தேர்தல் முடிந்து 18வது நாடாளுமன்ற கூட்டத் தொடர் தொடங்கியபோது பிரதமர் மோடி எமர்ஜென்சி குறித்து பேசி காங்கிரஸை விமர்சித்திருந்தார். “இந்திய ஜனநாயகத்தின் மீது கரும்புள்ளி விழுந்து 50 ஆண்டுகள் நிறைவடைகிறது. இந்திய அரசியலமைப்பு எப்படி அகற்றப்பட்டது, நமது நாடு ஒரே இரவில் எப்படி சிறைச்சாலையாக மாறியது என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள். மீண்டும் ஒரு முறை இதுபோல நடக்கக் கூடாது என்று நாம் உறுதிமொழி எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

Trending News

Latest News

You May Like