1. Home
  2. தமிழ்நாடு

கருணை மதிப்பெண் பெற்ற 1563 பேருக்கு ஜூன் 23 மறுதேர்வு..!

Q

நீட் தேர்வில், ஒரே மையத்தில் தேர்வெழுதிய மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்ததும், கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக, மாணவர்கள் உள்ளிட்டோர் தாக்கல் செய்ய மனுக்களை உச்சநீதிமன்றம் விசாரித்து வரும் நிலையில், தற்போது அது தொடர்பாக மேலும் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அதில், கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டது குறித்து ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. நீட் கேள்வி தாள் கசிவு தொடர்பாக பிகார் அரசு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருவது தொடர்பான ஆவணங்களை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

வினாத்தாள் கசிவு, ஆள்மாறாட்டம், கருணை மதிப்பெண்கள் வழங்கியதில் முறைகேடு உள்ளிட்ட பல்வேறு புகார்கள் எழுந்துள்ளதால், நீட் தேர்வை ரத்து செய்துவிட்டு மறு தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், தான், நீட் தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமானோருக்கு கூடுதல் கருணை மதிப்பெண் வழங்கப்பட்டதற்கு எதிராக 20,000 மாணவர்களிடம் கையொப்பம் பெற்று அலக் பாண்டே என்பவரும் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

நீட் தேர்வு எழுதியவர்களில் 1,500-க்கும் அதிகமான தேர்வர்களுக்கு தேசிய தேர்வு முகமை தன்னிச்சையாக 70 முதல் 80 மதிப்பெண்கள் வரை கருணை மதிப்பெண் என்ற பெயரில் கூடுதல் மதிப்பெண் வழங்கியுள்ளது. இந்த விவகாரத்தை தெளிவுபடுத்தும் வரை, கலந்தாய்வுக்கு தடை விதிக்க வேண்டும்' என்று தனது மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை இன்று உச்ச நீதிமன்றம் விசாரித்தது. அப்போது நீட் தேர்வு விவகாரத்தில் பாதிக்கப்பட்ட 1,563 மாணவர்களுக்கு மறு நுழைவுத் தேர்வு நடத்த தயார் என்று தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. மேலும், தேர்வு எழுத விருப்பப்படும் மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும், தேர்வு எழுத விருப்பப்படாத மாணவர்களுக்கு பழைய மதிப்பெண்ணே தொடரும் என்றும் தேசிய தேர்வு முகமை தெரிவித்தது.ஜூன் 23ல் மறுதேர்வு நடத்த முடிவெடுத்துள்ளதாக தேசிய தேர்வு முகமை உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. 

இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், கவுன்சிலிங்க் பாதிக்கப்படாதவாறு நீட் மறு தேர்வை விரைவாக நடத்தி முடிவுகளை வெளியிட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தனர். மேலும் கருணை மதிப்பெண்களை தவிர்த்து மற்ற மாணவர்கள் எழுப்பும் மற்ற பிரச்சினைகளுக்கும் தீர்வு காணவேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

Trending News

Latest News

You May Like