சவுக்கு சங்கர் வழக்கில் நீதிபதிகள் விலகல்..!
பெண் காவலர்கள் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள சவுக்கு சங்கர் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இந்த வழக்குகளுக்கு எதிராக சவுக்கு சங்கரின் தாய் கமலா தொடர்ந்த ஆட்கொணர்வு மனுவை விசாரணை செய்த உச்சநீதிமன்றம், சவுக்கு சங்கருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தரவு பிறப்பித்தது. மேலும் பிற வழக்குகள் தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தை அணுக வேண்டும் என்றும் உச்சநீதிமன்றம் கூறி இருந்தது.
இந்த நிலையில் சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கு விசாரணையில் இருந்து விலகுவதாக நீதிபதிகள் எஸ்.எம்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு அறிவித்து உள்ளது. உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில் உயர்நீதிமன்ற அமர்வு குறித்து சில கருத்துக்கள் தெரிவிக்கபட்டுள்ளது. அதனால், இந்த வழக்கை விசாரிப்பது சரியாக இருக்காது என நீதிபதிகள் எம்.எஸ்.ரமேஷ் மற்றும் சுந்தர் மோகன் அமர்வு தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வழக்கை வேறு அமர்விற்கு மாற்ற பொறுப்பு தலைமை நீதிபதிக்கு பரிந்துரை செய்துள்ளார்.
சவுக்கு சங்கர் தொடர்பான வழக்கில் இருந்து நீதிபதிகள் விசாரிக்காமல் விலகுவது இது இரண்டாவது முறையாகும். ஏற்கெனவே நீதிபதி சுவாமிநாதன் அடங்கிய இரண்டு நீதிபதிகள் அமர்வில் இது போன்று நடைபெற்றது. பின்னர் இந்த வழக்கை மூன்றாவது நீதிபதி ஜெய்ச்சந்திரன் விசாரித்து மீண்டும் உயர்நீதிமன்றத்திற்கு அனுப்பினார். இதனால் புதிதாக வரும் நீதிபதி முதலில் இருந்து வழக்கின் கடந்து வந்த பாதையை பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய நிலை உள்ளது. இதனால் சிறையில் இருந்து சவுக்கு சங்கர் வெளியே வருவது மேலும் காலதாமதம் ஆகி உள்ளது.