பத்திரிகையாளர் மரணத்தால் தொடரும் பதற்றம்!
வங்கதேசத்தில் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனாவுக்கு எதிராக வன்முறைகள் வெடித்தன. இதனால், ஏராளாமானோர் கொல்லப்பட்டனர். மாநிலத்தின் முக்கிய நகரங்கள் சூறையாடப்பட்டன. ஹசீனா வெளியேறிய நிலையில் இப்போது புதிய அரசு பொறுப்பேற்றுள்ளது. இயல்பு நிலை திரும்ப முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.
எனினும் இன்னும் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்த வண்ணம் உள்ளன. ஹிந்து சிறுபான்மையினருக்கு அச்சுறுத்தல் தொடர்கிறது. இந்த நிலையில், பெண் பத்திரிக்கையாளர் சாரா ரஹனுமா, தலைநகர் டாக்காவில் உள்ள ஹடிர்ஜீல் குளத்தில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் வங்கதேசத்தில் மீண்டும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பொதுமக்கள் அளித்த தகவலின் பேரில், அவரது உடல் மீட்கப்பட்டு, டாக்கா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
உயிரிழந்த சாரா ரஹனுமா, கடந்த செவ்வாய்கிழமை (ஆக.,27) இரவு பேஸ்புக்கில் இரு பதிவுகளை போட்டிருந்தார். அதில், ‘மரணத்திற்கு இணையான வாழ்க்கையை வாழ்வதை விட சாவதே மேல்,’ என்று கருத்து பதிவிட்டிருந்தார்.
அதைத் தொடர்ந்து, 2வது பதிவில், தனது நண்பனுடன் வங்கதேச கொடியை தலையில் கட்டியவாறு இருக்கும் புகைப்படத்தை பகர்ந்து, ‘உன்னை போல் நண்பன் கிடைத்ததற்கு பெருமை அடைகிறேன். கடவுள் உன்னை ஆசிர்வதிப்பார். உன்னுடை கனவுகள் அனைத்தும் முழுமையடையும். நாம் இருவரும் சேர்ந்து நிறைய செயல்களை செய்ய திட்டமிட்டிருந்தோம். மன்னித்து விடு, ஆனால், அது நிறைவேறாது,’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அவரது நண்பன் பகம் பய்சல் சில நிமிடங்களிலேயே பதிலளித்திருந்தார். ‘நான் சந்தித்ததிலேயே நீ தான் சிறந்த நண்பன். நமது உறவை முறித்து விடாதே. நீயும் எதுவும் செய்து கொள்ளாதே,’ எனக் குறிப்பிட்டிருந்தார்.
இதனிடையே, இது கருத்து சுதந்திரத்தின் மீதான மற்றொரு தாக்குதல் என்று முன்னாள் பிரதமர் ஷேக் ஹசினாவின் மகன் ஷஜிப் வஷாத் தனது எக்ஸ் தளப்பக்கத்தில் குறிப்பிட்டிருந்தார்.
வங்கதேசத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.