விரைவில் ஜியோ ப்ரைன் தொழில்நுட்பம் அறிமுகம்..!
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் 47-ஆவது ஆண்டு பொதுக்குழு கூட்டம் மும்பையில் நடைபெற்றது. இதில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் நிர்வாகிகள், பங்குதாரர்கள் என ஏராளமானோர் பங்கேற்றனர்.
இந்த கூட்டத்தில் உரையாற்றிய ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி, பல முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார்.
இதில் பேசிய முகேஷ் அம்பானி, 20 வருட கடின உழைப்புக்குப் பிறகு ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தற்போது உலகின் தலைசிறந்த 500 நிறுவனங்களில் இணைந்துள்ளது. அடுத்த 20 ஆண்டுகளில் முதல் 50 நிறுவனங்களில் இடம் பெறுவதே எங்கள் நோக்கம்.
கடந்த ஆண்டு ரிலையன்ஸ் உயிர் ஆற்றல் கண்டுபிடிப்புகள், சூரிய சக்தி மற்றும் பிற பசுமை ஆற்றல் மூலங்கள் மற்றும் அதிக மதிப்புள்ள இரசாயனங்கள் உள்ளிட்ட துறைகளில் 2,555 கண்டுபிடிப்புகளுக்கு காப்புரிமைகளை கோரியுள்ளது.
வரவிருக்கும் தீபாவளியின் போது, ஜியோ ஏஐ-க்ளவுட்(JIO AI Cloud) அறிமுகப்படுத்தப்பட உள்ளது. இதில் ஜியோ பயனர்கள் 100 ஜிபி வரையிலான இலவச கிளவுட் சேமிப்பை பயன்படுத்த முடியும். இதில் புகைப்படங்கள், வீடியோக்கள், ஆவணங்கள் மற்றும் பிற டிஜிட்டல் கண்டென்ட் மற்றும் தரவுகளை பாதுகாப்பாக சேமித்து கொள்ள முடியும்.
ஜியோ செட் டாப் பாக்ஸ்களுக்கான உள்நாட்டு இயங்குதளமான ஜியோ டிவிஓஎஸ்(JIO TV OS) அறிமுகப்படுத்தப்பட்டது. ஜியோ டிவிஓஎஸ், அல்ட்ரா எச்டி 4கே வீடியோ, டால்பி விஷன் மற்றும் டால்பி அட்மோஸ் ஆகியவற்றிற்கான ஆதரவுடன் மேம்படுத்தப்பட்ட பார்வை அனுபவத்தை உறுதியளிக்கிறது.
ஜியோடிவி+ (JIO TV+) ல் 860க்கும் மேற்பட்ட லைவ் டிவி சேனல்கள் HD தரத்தில் காணலாம்.மேலும், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி+, ஹாட்ஸ்டார் போன்ற சேவைகளின் உள்ளடக்கத்தை ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கிறது.
ஜியோ ஹோம் IoT(JIO Home IoT), ஜியோ டிவிஓஎஸ் உடன் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வீட்டை ஆட்டோமேஷன் செய்வது, வீட்டின் இன்டலிஜென்ஸ் மற்றும் பதில் திறனை மேம்படுத்தும் சேவைகளை ஒரே தளத்தில் இருந்து ஒருங்கிணைக்கும் சேவையை அளிக்கிறது.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் இயங்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள ஜியோ ப்ரைன்(Jio Brain) தொழில்நுட்பம் விரைவில் அறிமுக செய்யப்பட உள்ளது.
ஜியோ போன்கால் ஏஐ(JIO Phonecall AI) என்பது AI சேவையை போன் கால்களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட ஒரு புதிய சேவையாகும். இது ஜியோ வாடிக்கையாளரின் அழைப்புகளை தானாக பதிவு செய்யவும், சேமிக்கவும் முடியும். மேலும், அதை தானாகவே குரலிலிருந்து உரையாக மாற்றவும், அழைப்பைச் சுருக்கி, அதை வேறொரு மொழியில் மொழிபெயர்க்கவும் முடியும். இந்த அனைத்து தரவுகளும் ஜியோ கிளவுட் மூலம் நிர்வகிக்கப்படும்.
AI என்பது ஆடம்பரமாக இருக்க கூடாது என ஜியோ நிறுவனம் உறுதியாக உள்ளது. மேலும் பயனர்கள் பொருளாதார பின்னணியை பொருட்படுத்தாமல் பயன்படுத்தும் வகையில் இந்த சேவைகள் இருக்கும் என தெரிவித்துள்ளார்.