1. Home
  2. தமிழ்நாடு

ஜார்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் கைது : 7 மணி நேர விசராணைக்கு பிறகு அமலாக்கத்துறை நடவடிக்கை..!

1

ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இம்மாநில முதல்வராக ஹேமந்த் சோரன் பதவி வகித்து வருகிறார். ஹேமந்த் சோரன் மீது சுரங்க முறைகேடு வழக்கு நிலுவையில் உள்ளது. இவ்வழக்கில் அமலாக்கத்துறையும் இணைந்து விசாரணை நடத்தி வருகிறது. ஹேமந்த் சோரன் மீதான வழக்கில் ஏற்கனவே 14 பேர் கைது செய்யப்பட்டனர்.

இவ்வழக்கில் ஹேமந்த் சோரனை விசாரணைக்கு ஆஜராக உத்தரவிட்டு 10 முறை அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. கடந்த சில நாட்களுக்கு முன்னர்தான் விசாரணைக்கு ஆஜரானர் ஹேமந்த் சோரன். இதனையடுத்து மீண்டும் விசாரணைக்கு அழைத்தது அமலாக்கத்துறை. ஆனால் ஹேமந்த் சோரன் விசாரணைக்கு ஆஜராகாமல் திடீரென தலைமறைவானார். அவருக்காக டெல்லி பங்களாவில் 30 மணிநேரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் காத்திருந்தனர்.

இந்நிலையில் டெல்லியில் இருந்து ராஞ்சி திரும்பிய ஹேமந்த் சோரன், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்கள் ஆலோசனைக் கூட்டத்தை கூட்டினார். இந்தக் கூட்டத்தில் ஜனவரி 31-ம் தேதி (நேற்று) அமலாக்கத்துறை விசாரணையின் போது தாம் கைது செய்யப்பட்டால் புதிய முதல்வர் யார் என்பது குறித்து விவாதிக்கப்பட்டது. ஹேமந்த் சோரன் மனைவி கல்பனாவை முதல்வராக்க விரும்புவதும் ஆலோசிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் கல்பனாவும் பங்கேற்றார்.

இப்பின்னணியில் நேற்று ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தினர். சுமார் 7 மணி நேரம் நடந்த விசாரணையின் முடிவில் ஹேமந்த் சோரனை அமலாக்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர். இதனை அடுத்து ஜார்க்கண்ட் தலைநகரில் பதற்றம் நிலவுகிறது. தலைநகர் ராஞ்சியில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு 7,000 போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஹேமந்த் சோரன் கைதை அடுத்து கல்பனா ஹேமந்த் சோரனை முதல்வராக்க கவர்னரிடம் கடிதம் கொடுக்க ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா முடிவு செய்துள்ளது. இதற்காக எம்.எல்.ஏக்களின் ஆதரவு கடிதமும் தயார் நிலையில் உள்ளதாம். இன்னொரு பக்கம் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா எம்.எல்.ஏக்களை உடைத்து புதிய ஆட்சி அமைக்க பாஜகவும் தயார் நிலையில் கடிதங்களுடன் காத்திருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

Trending News

Latest News

You May Like