நகைக்கடன் தள்ளுபடி.. புதிய உத்தரவை வாபஸ் பெறணும்..! - டிடிவி தினகரன்

“தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நகைக்கடன் தள்ளுபடியில் திமுக அரசு மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவது கண்டனத்திற்குரியது” என, டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
தமிழக கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி கோரி விண்ணப்பித்த 48.84 லட்சம் பேரில், 35.37 லட்சம் பேர் தகுதியில்லாதவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை பதிவாளர் சண்முக சுந்தரம் தெரிவித்துள்ளார்.
இந்த அறிவிப்புக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “தேர்தல் நேரத்தில் அளித்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் நகைக்கடன் தள்ளுபடியில் திமுக அரசு மக்களை ஏமாற்றும் வகையில் செயல்படுவது கண்டனத்துக்குரியது.
எப்படியாவது ஆட்சிக்கு வரவேண்டும் என்பதற்காக சாத்தியமில்லாத வாக்குறுதிகளை அள்ளித் தெளித்து அதிகாரத்திற்கு வந்துவிட்டு, இப்போது அதிலிருந்து தப்பிக்க காரணங்களை தேடுவது மக்களுக்கு செய்யும் துரோகமாகும்.
எனவே, பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டோருக்கு நகைக்கடன் தள்ளுபடி இல்லை என்ற புதிய உத்தரவை திமுக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லாவிட்டால், திமுக என்றாலே தில்லு முல்லு என்பதை தமிழக மக்கள் மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொள்வார்கள்” என்று கூறியுள்ளார்.